மேயர் தேர்தல் வாக்குச்சீட்டில் ‘எக்ஸ்' குறியிட்டது ஏன்? - சண்டிகர் தேர்தல் அதிகாரியிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சண்டிகர் மேயர் தேர்தல் வாக்குச் சீட்டுகளில் 'எக்ஸ்' குறியிட்டது ஏன் என்று தேர்தல் நடத்திய அதிகாரியிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

சண்டிகரில் நடந்த மேயர் தேர்தலில் பாஜக 4 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் முறைகேடு செய்து பாஜக வெற்றி பெற்றதாக கூறி ஆம் ஆத்மி கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, சண்டிகர் மேயர் தேர்தலில் ஜனநாயகம் கேலிக்கூத்து ஆக்கப்பட்டுள்ளது என்று கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், மாநகராட்சியின் முதல் கூட்டத்தொடரை காலவரையின்றி தள்ளிவைத்தது. தேர்தல் நடத்திய அதிகாரி அனில் மசிஹ் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறும் உத்தரவிட்டது.

இந்நிலையில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. சண்டிகர் நிர்வாகம் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். சண்டிகர் மேயர் தேர்தலை முன்னின்று நடத்திய தேர்தல் அதிகாரி அனில் மசிஹ் ஆஜரானார். அதன் விவரம்:

தலைமை நீதிபதி சந்திரசூட்: கேள்விகளுக்கு அனில் மசிஹ் உண்மையான பதிலை அளிக்காவிட்டால், தேர்தல் அதிகாரியான உங்கள் மீது வழக்கு தொடர நேரிடும். இது மிகவும் தீவிரமான விஷயம். சண்டிகர் மேயர் தேர்தல் காணொலி காட்சியை பார்த்தோம். கேமராவை பார்த்துக்கொண்டே வாக்குச் சீட்டில் எதற்காக 'எக்ஸ்' குறியிட்டீர்கள்?

அனில் மசிஹ்: 8 வாக்குச் சீட்டுகளில் நான் 'எக்ஸ்' குறியிட்டேன். வாக்குச் சீட்டுகள் தனித்தனியாக பிரிக்கப்பட வேண்டியதால் அவ்வாறு செய்தேன்.

தலைமை நீதிபதி: ஆவணங்களில் மட்டுமே கையெழுத்திட வேண்டிய நீங்கள், வாக்குச் சீட்டை சிதைத்தது ஏன்? வாக்குச் சீட்டுகளில் இவ்வாறு குறியிட எந்த விதிகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாக்குச் சீட்டுகளை தேர்தல் அதிகாரி சிதைக்கும் செயலில் ஈடுபட்டது கண்டனத்துக்குரியது. நடத்தை விதிகளை மீறி தேர்தலில் தலையீடு செய்ததற்காக அனில் மசிஹ் மீது வழக்கு தொடர்வதற்கு சண்டிகர் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தலைமை நீதிபதி அறிவுறுத்தினார்.

'சண்டிகர் மேயர் தேர்தலில் குதிரை பேரம் நடந்து கொண்டிருப்பது மிக தீவிரமான விஷயம். சண்டிகர் மாநகராட்சியில் புதிதாக தேர்தல் நடத்துவதற்கு பதிலாக. அரசியல் சார்பற்ற புதிய தேர்தல் அதிகாரியை நியமித்து வாக்குகளை எண்ணலாம். ஆனால், வாக்குச் சீட்டுகளை ஆராய்ந்த பிறகே அதுகுறித்து முடிவெடுக்க முடியும். தேர்தலில் பதிவான வாக்குச் சீட்டுகளை 20-ம் தேதி (இன்று) நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு ஒப்படைக்க வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்தது.

தேர்தல் அதிகாரி ஒருவர் நாட்டின் தலைமை நீதிபதியால் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படுவது இதுவே முதல்முறை.

பாஜக மேயர் ராஜினாமா: இதற்கிடையே, கடந்த 18-ம் தேதி இரவு பாஜகவை சேர்ந்த மனோஜ் சோன்கர் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து சண்டிகர் பாஜக தலைவர் ஐதீந்தர் பால் மல்ஹோத்ரா கூறும்போது, “எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மக்களின் மனதில் சந்தேகத்தை உருவாக்கி பாஜக மீது அவதூறு பரப்பும் செயலில் ஈடுபட்டு வருகின்றன. அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பிறகே தற்போதைக்கு மேயர் பதவியில் இருந்து விலகுவது என்ற முடிவுக்கு வந்துள்ளோம்" என்றார்.

மேயர் பதவியை மனோஜ் சோன்கர் ராஜினாமா செய்ததையும் தலைமை நீதிபதி நேற்று கவனத்தில் எடுத்துக் கொண்டார்.

இதற்கிடையே, சண்டிகரில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பூனம் தேவி, நேகா முஸ்வாத், குர்சரண் கலா ஆகிய 3 கவுன்சிலர்களும் 18-ம் தேதி மாலை பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவடேவை சந்தித்து அக்கட்சியில் இணைந்தது சண்டிகர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்