MSP விவகாரம்: ‘மத்திய அரசின் முன்மொழிவை நிராகரிக்கிறோம்’ - விவசாய அமைப்புகள்

By செய்திப்பிரிவு

சண்டிகர்: வேளாண் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த மத்திய அரசின் புதிய முன்மொழிவை நிராகரிப்பதாக விவசாய அமைப்புகள் கூட்டாக இணைந்து தெரிவித்துள்ளன. அதோடு 21-ம் தேதி தங்களது ‘டெல்லி சலோ’ பேரணி மீண்டும் தொடங்கும் என தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை விவசாய சங்கத்தினர் மத்திய அரசுடன் 4-ம் கட்ட பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அதில் ஒப்பந்த அடிப்படையில் வேளாண் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து விவசாயிகளிடம் முன்மொழிந்துள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். இது குறித்து விவசாயிகள் தங்களது முடிவை தெரிவிக்கலாம் எனவும் அவர் சொல்லி இருந்தார். இந்நிலையில், விவசாய அமைப்புகள் அதனை நிராகரித்துள்ளது.

“நாங்கள் கூட்டாக கலந்து பேசி விவாதம் மேற்கொண்டோம். அதன் மூலம் அரசின் திட்டத்தில் விவசாயிகளுக்கு சாதகமாக இல்லை எதுவும் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளோம். அதனால் நாங்கள் அதை நிராகரிக்கிறோம்” என விவசாய அமைப்பின் தலைவர் ஜக்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தின் 7 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இப்படி செய்ய எந்த அதிகாரமும் கிடையாது. பஞ்சாப் மாநில அரசு இதற்கு அனுமதி கொடுத்துள்ளதா என்பது குறித்த தெளிவான விளக்கம் தர வேண்டும் என விவசாய சங்க தலைவர் சர்வான் சிங் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லி நோக்கி செல்ல முயலும் விவசாயிகளில் சுமார் 400 பேர் ஹரியாணா - பஞ்சாப் எல்லையில் போலீஸ் நடவடிக்கை காரணமாக காயம் அடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தங்களது கோரிக்கைகளுக்கு அரசு தீர்வு காண வேண்டும் அல்லது அறவழியில் போராட அனுமதிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தாங்கள் தயார் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு விவசாய அமைப்புகள் இணைந்து வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, கொள்முதலுக்கான உத்தரவாதம், விவசாய கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி நோக்கி செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE