சண்டிகர் மாநகராட்சி மேயர் பொறுப்பில் இருந்து பாஜக-வின் மனோஜ் சோன்கர் ராஜினாமா

By செய்திப்பிரிவு

சண்டிகர்: சண்டிகர் மாநகராட்சி மேயர் பொறுப்பில் இருந்து பாஜக-வின் மனோஜ் சோன்கர் ராஜினாமா செய்துள்ளார். மேயர் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன் விசாரணை இன்று (பிப்.19) நடைபெற உள்ள நிலையில் பதவியை ராஜினாமா செய்துள்ளார் மனோஜ் சோன்கர்.

சண்டிகர் மாநகராட்சிக்கு கடந்த மாதம் மேயர் தேர்தல் நடைபெற்ற நிலையில், அதை இண்டியா கூட்டணி இணைந்து எதிர்கொண்டது. பாஜகவும் வேட்பாளரை நிறுத்தியது. இந்தத் தேர்தலில் பாஜக சார்பில் மனோஜ் சோன்கர் போட்டியிட்ட நிலையில், அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இண்டியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மியின் குல்தீப் குமார் போட்டியிட்டார்.

இந்த மேயர் தேர்தலில் மொத்தம் 36 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். பாஜகவுக்கு 16 வாக்குகள் கிடைத்தன. இண்டியா கூட்டணிக்கு 20 வாக்குகள் கிடைத்தன. இருப்பினும் இண்டியா கூட்டணி வேட்பாளருக்கு கிடைத்த வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டது. அதனால் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்தார்.

தொடர்ந்து பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. பாஜக வேட்பாளரின் வெற்றிக்கு இடைக்கால தடையும் கோரியது ஆம் ஆத்மி. அதற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவிக்க உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் வழக்கு தொடர்ந்தார். கடந்த 5-ம் தேதி ஜனநாயகத்தை இப்படி படுகொலை செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு கண்டித்தது.

மேலும், தேர்தலில் பதிவான வாக்குச் சீட்டுகள், தேர்தல் நடைமுறை பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆவணங்கள், வீடியோ பதிவுகள் உள்ளிட்டவற்றை உயர் நீதிமன்ற பதிவாளர் மூலம் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற உள்ள நிலையில் மேயர் பதவியில் இருந்து விலகி உள்ளார் மனோஜ் சோன்கர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE