‘மொத்த நாடும் மத்திய அரசை பார்த்துக் கொண்டிருக்கிறது’ - விவசாய சங்கத் தலைவர் சர்வான் சிங் பாந்தர்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “நாங்கள் எங்கள் கோரிக்கைகளை அனுப்பியுள்ளோம், மூன்று கட்ட பேச்சுவார்த்தையின் போதும் ஒவ்வொரு பிரச்சினை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இப்போது மத்திய அரசு தான் முடிவு எடுக்க வேண்டும். ஒட்டுமொத்த நாடும் அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது” என்று 4-வது கட்ட பேச்சுவார்த்தைக்கு முன்பு விவசாய சங்கத்தலைவர் சர்வான் சிங் பாந்தர் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம், விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கான மூன்று மத்திய அமைச்சர்கள் மற்றும் விவசாய சங்கத் தலைவர்களுக்கு இடையேயான நான்காவது கட்ட பேச்சுவார்த்தை சண்டிகரில் இன்று நடக்கிறது.

விவசாயிகள் சங்கத்தினர் மத்திய அரசுடன் கடந்த 8, 12 மற்றும் 16-ம் தேதிகளில் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்தவித தீர்வும் ஏற்படவில்லை. பேச்சுவார்த்தையில் மத்திய வேளாண் அமைச்சர் அர்ஜூன் முண்டா, வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் ஆகியோர் பங்கேற்றனர். இதனிடயே 3-ம் கட்ட பேச்சுவார்த்தையில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், பஞ்சாப் நிதியமைச்சர் ஹர்பல் சிங் சீமா ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200 விவசாய அமைப்புகளைச் சேர்ந்த விவசாயிகள் பஞ்சாப்பில் இருந்து பிப்.13-ம் தேதி டெல்லி நோக்கி செல்லும் பேரணியைத் தொடங்கினர். இப்பேரணி பஞ்சாப் - ஹரியாணா, ஹரியாணா - டெல்லி எல்லைகளைக் கடந்து தேசியத் தலைநகரை அடைய வேண்டும்.

விவசாயிகளின் பேரணி பஞ்சாப்பில் இருந்து காலை 10 மணிக்கு தொடங்கிய இரண்டு மணிநேரத்துக்கு பின்னர் ஹரியாணா எல்லையான ஷம்புவை அடைந்தது. இந்த நிலையில், போராட்டக்காரர்கள் மீது ஹரியாணா போலீஸார் கண்ணீர்ப் புகைக் குண்டு வீசி தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு விவசாயிகள் போலீஸாருக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இதனிடையே மத்திய அரசுடனான பேச்சு வார்த்தையை முன்னிட்டு பஞ்சாப் - ஹரியாணா எல்லையில் விவசாயிகள் தங்கி போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் 6-வது நாளை எட்டியுள்ளது.

முதல்வர்கள் நம்பிக்கை: இந்தநிலையில், மத்திய அரசுடன் விவசாயிகள் நடத்தும் 4-வது கட்டப் பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதேபோல் பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படும் என்று நான் நம்புகிறேன். குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து மத்திய அரசு கட்டாயம் முடிவு எடுக்க வேண்டும் என்ற ஹரியாணாவின் முன்னாள் முதல்வரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பூபேந்திர சிங் ஹுடா தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைக்கு முன்னதாக விவசாய சங்கத்தலைவர் சர்வான் சிங் பாந்தர், “நாங்கள் எங்கள் கோரிக்கைகளை அனுப்பியுள்ளோம், மூன்று கட்ட பேச்சுவார்த்தையின் போதும் ஒவ்வொரு பிரச்சினை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இப்போது அவர்கள் (மத்திய அரசு) முடிவு எடுக்க வேண்டும். பந்து அவர்களின் மைதானத்தில் இருக்கிறது. ஒட்டுமொத்த நாடும் அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

இணைய சேவை ரத்து நீட்டிப்பு: இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் பாட்டியாலா, சங்ரூர், ஃப்தேகர் சாஹிப் உள்ளிட்ட பஞ்சாப்பின் சில மாவட்டங்களில் இணையசேவைக்கானத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக விவசாயிகளின் டெல்லி சலோ பேரணியை முன்னிட்டு பிப்.12 முதல் 16-ம் தேதி வரை தடை செய்யப்பட்டிருந்தது.

அதேபோல் ஹரியாணா அரசும் டெல்லி சலோ பேரணியை முன்னிட்டு மாநிலத்தின் ஆம்பாலா, குருஷேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசார், ஃபதேகாபாத் மற்றும் சிர்ஸா மாவட்டங்களில் பிப்.19ம் தேதி வரை இணைய சேவை, மொத்தமாக குறுஞ்செய்தி அனுப்ப தடை செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளின் நலனுக்காக யுபிஏ அரசு பல நடவடிக்கை எடுத்தது: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமாரி செல்ஜா கூறுகையில், “மத்தியில் ஆட்சியில் உள்ள என்டிஏ கூட்டணி அரசு இன்னும் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யவில்லை. ஆனால் யுபிஏ ஆட்சியில் ரூ.72,000 கோடி கடன் ரத்து செய்யப்பட்டது. சுவாமிநாதன் கமிஷனின் பெரும்பாலான பரிந்துரைகளை காங்கிரஸ் அரசு அமல்படுத்தியது. 201 பரிந்துரைகளில் 175 பரிந்துரைகளை காங்கிரஸ் ஆட்சியில் அமல்படுத்தப்பட்டது என்பதை அவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

காங்கிரஸ் அரசு விவசாயக் கடன்களின் வட்டி விகிதத்தை 11 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைத்தது. உரங்கள், விதைகள், மருந்துகள், டிராக்டர்கள் மற்றும் நீர்ப்பாசன உபகரணங்களுக்கு காங்கிரஸ் அரசு வரி விதிக்கவில்லை. பல்வேறு திட்டங்களின் கீழ் விவசாய வளங்களுக்கு 100 சதவீதம் வரி விலக்கு அளித்தது" என்று தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் ஹரியாணா விவசாய சங்கங்கள்: பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால், ஹரியாணா விவசாய சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடும் என்று பாரதிய கிஷான் யூனியன் (சாருனி) குர்னாம் சிங் சாருனி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை தோல்வியைடைந்தால் பஞ்சாப்பில் போராடும் விவசாய சகோதரர்களுடன் ஹிரயாணாவின் விவசாய சங்கங்கள், காப்கள், சுங்கக்கமிட்டிகள் போராட்டத்தில் இணைந்து கொள்ளும்” என்று தெரிவித்துள்ளார். கடந்த 2020- 21-ம் ஆண்டுகளில் மூன்று வேளாண் சட்டத்தை எதிர்த்து நடந்த விவசாயிகளின் போராட்டத்தை முன்னெடுத்த பாரதிய கிஷான் யூனியன், தற்போதைய போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் விலகியே இருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்