“மதச்சார்பின்மை மோசமானது என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது” - மம்தா பானர்ஜி

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: “மதச்சார்பின்மை மோசமானது. ஜனநாயகம் ஆபத்தானது என்று யாராவது சொன்னால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் கூட்டாட்சி முறை முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது, பல மாநிலங்கள் ஜிஎஸ்டி வரியில் தங்களுக்கு உரிய பங்கினை பெறவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அதன் வீடியோவை மம்தா தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “மதச்சார்பின்மை மோசமானது. சமத்துவம் நினைத்து பார்க்கக்கூடாதது, ஜனநாயகம் ஆபத்தானது மற்றும் கூட்டாட்சி அமைப்பு பேரழிவானது என்று யாரவது சொன்னால் அதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. நமது அரசியல் அமைப்புச் சட்டத்தினை மாற்றவேண்டும் என்று யாராவது சொன்னால், அது குறிப்பிட்ட சிந்தாந்தத்தையோ, பார்வையையோ திருப்திபடுத்துவதற்காகவே இருக்கும்.

நமது அரசியலமைப்பின் ஆன்மாவே அதன் முன்னுரை தான். நாட்டின் அரசியல் அமைப்பு சட்டம் ஜனநாயகம், கூட்டாட்சி மற்றும் மதச்சார்பின்மை ஆகியவைகளின் மீது தீவிர கவனம் செலுத்தி விடாமுயற்சியுடன் எழுதப்பட்டுள்ளது.அடிப்படை உரிமைகளுக்கும் நாட்டின் இறையாண்மைக்கும் இடையில் உள்ள சமநிலை கலைக்கப்படக்கூடாது.

அரசியலமைப்பு, ஒரு நிறுவனத்தால், நிறுவனத்துக்காக மட்டுமே இயக்கப்படும் என்றால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியலமைப்பு மக்களின், மக்களால், மக்களுக்காக ஆனது. எனக்கு பேச உரிமை இல்லை. ஒரு வேளை நான் ஆணித்தரமாக பேசினால் நாளை என் வீட்டுக்கு அமலாக்கத்துறை வரும். நான் ராஜீவ் காந்தி முதல் மன்மோகன் சிங் வரை பல பிரதமர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். ஆனால் இப்படி ஒரு சிறந்த பிரதமரை (மோடியின் பெயரைக் குறிப்பிடாமல் கேலியுடன்) பார்த்ததில்லை.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி அரசியல் மரியாதையை கடைபிடிக்கிறது எங்கள் கட்சி பிற அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களையும் மதிக்கிறது. டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வங்கத்தில் இருந்து அரசியல் நிர்ணய சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதை நான் இங்கு நினைவு கூர்கிறேன். அவருடைய சித்தாந்தம் மற்றும் தொலைநோக்கு பார்வை நீதி, சமத்துவம், அனைத்து மக்களுக்கும் சுதந்திரம் கிடைப்பதை உறுதி செய்யும் வலுவான ஜனநாயகத்துக்கு அடித்தளமிட்டது.

பாரத நாட்டின் கலாச்சாரம், மொழி, மதம் மற்றும் சமூகத்தின் பன்முகத் தன்மைக்கு மத்தியில் ஒற்றுமையைக் கட்டி எழுப்புவதற்கு ஒவ்வொரு இந்தியரையும் இணைக்கும் கடின உழைப்பை அரசியலமைப்பு செய்கிறது. நாட்டின் தேவைக்கு ஏற்ப அரசியலமைப்பு திருத்தப்பட்டுள்ளன. ஆனால் இப்போது என்ன நடக்கிறது என்பதில் நான் பயம் கொள்கிறேன். ஒரு பயங்கரமான விஷயம் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சாதாரண மனிதனாக என்னால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

என்ன சாப்பிட வேண்டும், என்ன மொழி பேச வேண்டும், என்ன உடுத்த வேண்டும் என்று வேறு யாராவது நமக்குச் சொன்னால் அப்புறம் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புக்கு என்ன வேலை? நாம் அமைதியாக வாழ விரும்புகிறோம். அதனைச் செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு” இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE