2022-23 நிதி ஆண்டில் பாஜக பெற்ற நன்கொடை ரூ.720 கோடி

By செய்திப்பிரிவு

பாஜக 2022 - 23 நிதி ஆண்டில் மட்டும் ரூ.720 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது. இது காங்கிரஸ், ஆம் ஆத்மி, மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட தேசிய கட்சிகள் சென்ற நிதி ஆண்டில் பெற்ற மொத்த நன்கொடையை விட 5 மடங்கு அதிகம் ஆகும். கட்சிகள் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் பெறும் நன்கொடைகள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும்.

இதன்படி, கடந்த 2022-23 நிதி ஆண்டில், தேசிய கட்சிகளுக்கு 12,167 நன்கொடையாளர்கள் மூலம் ரூ.850.43 கோடி நன்கொடை வந்துள்ளது என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் ( ஏடிஆர் ) தெரிவித்துள்ளது. இது 2021-22 நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 12 சதவீதம் அதிகம் ஆகும்.

2022-23 நிதி ஆண்டில் 7,945 நன்கொடையாளர்கள் மூலம் பாஜக ரூ.719.85 கோடி நன்கொடை பெற்றுள்ளது. அதுவே காங்கிரஸுக்கு 894 நன்கொடை யாளர்கள் மூலம் ரூ.79.92 கோடி வந்துள்ளது. தேசிய கட்சியான பகுஜன் சமாஜ், 2022-23 நிதி ஆண்டில் தாங்கள் எந்த நன்கொடையும் பெறவில்லை என்று தெரிவித்துள்ளது.

பாஜக உட்பட தேசிய கட்சிகளுக்கு வந்த நன்கொடையில் ரூ.276.20 கோடி டெல்லியிலிருந்தும், ரூ.160.50 கோடி குஜராத்திலிருந்தும், ரூ.96.27 கோடி மகாராஷ்டிராவிலிருந்தும் வந்துள்ளன.

மொத்த நன்கொடையில் ரூ.680.49 கோடி கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் வந்துள்ளன. பாஜக பெற்ற நன்கொடையில் கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்களிப்பு 80 சதவீதம் ஆகும். 2021 - 22 நிதி ஆண்டில் பாஜக பெற்ற நன்கொடை ரூ.614.62 கோடி ஆகும். அதனுடன் ஒப்பிடுகையில் 2022-23 நிதி ஆண்டில் அக்கட்சி பெற்ற நன்கொடை 17.12 சதவீதம் அதிகரித்துள்ளது. காங்கிரஸ் 2021-22 நிதி ஆண்டில் ரூ.95.45 கோடி நன்கொடை பெற்றுள்ளது. சென்ற நிதி ஆண்டில் அது 16.27 சதவீதம் குறைந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE