டெல்லி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கேஜ்ரிவால் வெற்றி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவையில் மொத்தம் 70 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆளும் ஆம் ஆத்மிக்கு 62, பாஜகவுக்கு 8 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க மத்தியில் ஆளும் பாஜக முயற்சி செய்கிறது என்று முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அண்மையில் குற்றம் சாட்டினார்.

இந்த சூழலில் டெல்லி சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கேஜ்ரிவால் தாக்கல்செய்தார். இதன் மீதான விவாதம்நேற்று நடைபெற்றது. அப்போது முதல்வர் கேஜ்ரிவால் பேசியதாவது:

டெல்லி அரசின் ஆட்சி நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடுகிறது. எனது உதவியாளரைகூட என்னால்மாற்ற முடியாது. அரசு அலுவலர்களின் செயல்பாடுகளை மத்தியஅரசு தடுக்கிறது. மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தவிடாமல் பாஜக இடையூறு செய்து வருகிறது. அதையும் மீறி மக்கள் பணிகளை செய்து வருகிறோம்.

பாஜகவை எதிர்க்கும் வலிமை கொண்ட கட்சியாக ஆம் ஆத்மிஉருவெடுத்துள்ளது. இதன்காரணமாக எங்கள் கட்சியை அழிக்கபாஜக தீவிர முயற்சி செய்கிறது. டெல்லி ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க எங்களது எம்எல்ஏக்களுக்கு பாஜக விலை பேசியது.

வரும் மக்களவைத் தேர்தலில்பாஜக ஆட்சியைக் கைப்பற்றினாலும் வரும் 2029-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மியால், பாஜக ஆட்சி அகற்றப்படும்.

இவ்வாறு அர்விந்த கேஜ்ரிவால் பேசினார்.

பாஜக மூத்த தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ரம்வீர் சிங் பிதுரி பேசும்போது, “அரசு மருத்துவமனை, குடிநீர் கட்டணம், மதுபான உரிமம், சிறைச்சாலை, மின் வாரியம் என அனைத்துதுறைகளிலும் ஆம் ஆத்மி அரசுஊழலில் ஈடுபட்டு வருகிறது. சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலம் இருந்தும் மக்களின் கவனத்தை திசை திருப்ப நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது’’ என்று குற்றம் சாட்டினார்.

குரல் வாக்கெடுப்பு: இறுதியில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் கேஜ்ரிவால் தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.

8 எம்எல்ஏக்கள் வரவில்லை: ஆம் ஆத்மியின் 3 எம்எல்ஏக்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். 2 பேர் சிறையில் உள்ளனர். 2 பேரின் வீடுகளில் திருமண விழா நடைபெறுகிறது. ஒரு எம்எல்ஏ வெளிநாட்டில் உள்ளார்.

இதன்காரணமாக ஆம் ஆத்மியின் 62 எம்எல்ஏக்களில் 54 பேர் மட்டுமே நேற்று சட்டப்பேரவையில் இருந்தனர். துணைநிலை ஆளுநர் உரையின்போது இடையூறு செய்ததற்காக பாஜகவின் 7 எம்எல்ஏக்கள் இந்த கூட்டத்தொடர் முழுவதும் நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE