டெல்லியில் பாஜக தேசிய கவுன்சில் கூட்டம் கூடியது: தேர்தல் வெற்றிக்கு உழைக்குமாறு பிரதமர் மோடி கட்டளை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: வரும் மக்களவைத் தேர்தலில் 370 இடங்களில் பாஜகவை வெற்றி பெற வைக்க கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் உழைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

2024 மக்களவைத் தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை இம்மாத கடைசியிலோ அல்லது மார்ச் மாத தொடக்கத்திலோ தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை உள்ளிட்ட பணிகளில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் 2 நாள் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் இரு நாட்கள் நடைபெறும் இந்த தேசிய செயற்குழு கூட்டத்தை (தேசிய கவுன்சில் கூட்டம்) பிரதமர் நரேந்திர மோடி நேற்று குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இந்த கூட்டத்தில் மாநிலங்களை ஆளும் பாஜக முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், தேசிய நிர்வாகிகள், மாநில, மாவட்டத் தலைவர்கள், பல்வேறு அணிப் பிரிவுகளின் தலைவர்கள், தேசிய செயற்குழு நிர்வாகிகள் என 11,500 பேர் பங்கேற்றுள்ளனர்.

பாஜக செயற்குழுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய விவரங்களை, பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான வினோத் தாவ்டே வெளியிட்டார்.

தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

370 சாதாரண இலக்கல்ல.. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் தேர்தல் சின்னமான ‘தாமரை’தான் அக்கட்சியின் வேட்பாளர். பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி 370 முதல் 400 இடங்களை வெல்லும். 370 என்பது சாதாரண எண்ணிக்கை அல்ல. பாஜக 370 இடங்களை கைப்பற்றுவதே இந்திய அரசியலமைப்பின் 370-வது பிரிவை கடுமையாக எதிர்த்த ஜனசங்க நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜிக்கு உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

அதுவே ஷியாமா பிரசாத் முகர்ஜிக்கு நாம் அளிக்கும் மரியாதையாக இருக்கும். வளர்ச்சி, ஏழைகளின் நலன், உலகளவில் நாட்டுக்கு கிடைத்த பெருமை ஆகியவற்றை மையப்படுத்தியே பாஜகவின் பிரச்சாரம் இருக்க வேண்டும். இந்த விஷயங்களை மக்களிடம் பாஜக தொண்டர்கள் தெளிவாக எடுத்துச் செல்ல வேண்டும்.

தேர்தலின்போது எதிர்க்கட்சிகள் தேவையற்ற மற்றும் உணர்ச்சிகரமான பிரச்சினைகளை எழுப்புவார்கள். ஆனால் பாஜகவினர் வளர்ச்சி, ஏழைகளுக்கு ஆதரவான கொள்கைகள் மற்றும் நாட்டின் வளர்ச்சியில் கவனத்தை செலுத்த வேண்டும்.

பூத் ஏஜெண்டுகளுக்கு உத்தரவு: 370-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெறுவதற்கான பணிகளில் தொண்டர்களும், நிர்வாகிகளும் கடுமையாக உழைக்க வேண்டும்.

ஒவ்வொரு பூத் ஏஜெண்டும் அவர்களின் வாக்குச் சாவடிகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். 2019-ம் ஆண்டு தேர்தலில் பெற்றதைவிட வரும் தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பாஜ கட்சிக்கு கூடுதல் வாக்குகள் கிடைப்பதை பூத் ஏஜெண்டுகள் உறுதி செய்யவேண்டும்.

ஏழைகளுக்கான நலத்திட்ட பணிகள் செய்வதுடன், நாட்டின் வளர்ச்சி மற்றும் உலக அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்திருப்பது உள்ளிட்ட விஷயங்களை மக்களிடம் விளக்கி பாஜக தொண்டர்கள் பிரச்சாரம் செய்யவேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கிய அரசியலமைப்பு சட்டம் 370-வது பிரிவை கடுமையாக எதிர்த்தவர் பாஜக சித்தாந்தவாதி ஷியாமா பிரசாத் முகர்ஜி. இந்த சட்டப்பிரிவை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் 2 நாள் செயற்குழு கூட்டம் இன்றும் தொடர்ந்து நடைபெறஉள்ளது. இறுதி நாள் நிகழ்ச்சியில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2014 மக்களவைத் தேர்தலில் 282 இடங்களுடன் பெரும்பான்மையை பெற்றது பாஜக. அதைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 303 இடங்களில் பாஜக ெற்றி பெற்றது. இந்நிலையில் 2024 தேர்தலில் 370 இடங்கள் வெற்றி இலக்கு என்ற கொள்கையுடன் தேர்தலைச் சந்திக்கிறது பாஜக. மேலும் 2019-ல் பாஜக போட்டியிட்டு தோல்வியடைந்த 133 தொகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தவும் கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE