பாஜக, பிஎஸ்பி ஆகிய இரு கட்சிகளில் பஞ்சாபில் அகாலி தளம் யாருடன் கூட்டணி? - விவசாயிகள் போராட்டத்தை பொறுத்து முடிவு

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: டெல்லியில் தொடங்கிய விவசாயிகள் போராட்டத்தின் முடிவை பொறுத்து பஞ்சாபில் தேர்தல் கூட்டணி அமைய உள்ளது. பாஜக, பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி) ஆகிய இரு கட்சிகளில் யாருடன் கூட்டணி அமைப்பது என இம்மாநிலத்தின் முன்னாள் ஆளும் கட்சியான சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) பரிசீலித்து வருகிறது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பழமையான உறுப்பினராக இருந்தது எஸ்ஏடி. பாஜக ஆதரவுடன் 2007 மற்றும் 2012-ல் தொடர்ந்து இரண்டு முறை இக்கட்சி பஞ்சாபில் ஆட்சி அமைத்தது. கடந்த 2020-ல் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து பாஜகவிடமிருந்து எஸ்ஏடி விலகியது. இதனால், கடந்த 2022 சட்டப்பேரவை தேர்தலில் பிஎஸ்பி-யுடன் இணைந்து போட்டியிட்டது. இதில் அதிக பலன் கிடைக்காததால் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைக்க விரும்புகிறது. இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கவிருந்த நிலையில் டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம் தொடங்கிவிட்டது. இதனால் எஸ்ஏடி தனது முடிவை நிறுத்தி வைத்துள்ளது.

பஞ்சாப் விவசாயிகள் தலைமையில் இப்போராட்டம் நடைபெறுவது எஸ்ஏடி முடிவெடுக்கத் தடையாகிவிட்டது. ஏனெனில், பஞ்சாப்வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள். இவர்கள்,குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் இப்போராட்டத்தை பிப்ரவரி 13-ல் தொடங்கினர்.

மத்திய அரசுடன் கடந்த 8, 12, 15 ஆகிய தேதிகளில் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் ஏற்படவில்லை. இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (பிப்.18)நான்காம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. எனவே, விவசாயிகள் போராட்ட முடிவுகளை பொறுத்து கூட்டணி முடிவை எடுக்க எஸ்ஏடி காத்திருக்கிறது.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் எஸ்ஏடி நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, “பாஜகவுடன் கிடைத்த அளவுக்கு பிஎஸ்பி கூட்டணியால் பலன் கிடைக்கவில்லை. மீண்டும் பாஜகவுடன் சேர விவசாயிகள் போராட்டத்தின் முடிவு அவசியம். இது மத்திய அரசுக்கு எதிராக இருந்தால், பாஜகவுடன் நாங்கள் சேரமுடியாது. இது தொடர்பாக ஆலோசிக்க எங்கள் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை” என்று தெரிவித்தனர்.

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி முதன்முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இக்கட்சியுடன், பஞ்சாபின் எதிர்க்கட்சியான காங்கிரஸும் இண்டியா கூட்டணியில் உள்ளது. எனினும் இவ்விரு கட்சிகளும் வரும் மக்களவைத் தேர்தலில் பஞ்சாபின் 13 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகின்றன.

இச்சூழலில், பாஜக, எஸ்ஏடி கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டால் வாக்குகள் பிரிவதற்கு வாய்ப்பு உள்ளது. 2019 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் 8 இடங்களில் வென்றது. கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜகவும் எஸ்ஏடியும் தலா 2 இடங்களில் வென்றன. ஆம் ஆத்மி ஓரிடம் பெற்றது. சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பிஎஸ்பி-க்கு எதுவும் கிடைக்கவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE