ரூ.84,560 கோடிக்கு ராணுவ தளவாடங்கள்: ஒப்பந்தங்கள் மேற்கொள்ள பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ரூ.84,560 கோடி மதிப்பில் ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

கடற்படை பயன்பாட்டுக்கு 9 சி-295 ரக விமானங்களும், கடலோர காவல் படை பயன்பாட்டுக்கு 6சி-295 விமானங்களும் வாங்கப்படஉள்ளன. இதில் 2 விமானங்களில் ஸ்பெயினில் மாற்றம் செய்யப்படும். 13 விமானங்கள் டாடா-ஏர்பஸ் நிறுவனம் இணைந்து இந்தியாவில் ரூ.29,000 கோடி மதிப்பில் தயாரிக்கும். இந்த விமானங்கள் நாட்டின் நீண்ட கடலோர பகுதி கண்காணிப்பை வலுப்படுத்தும்.

இந்திய விமானப்படை மற்றும்டிஆர்டிஓ இணைந்து மேற்கொள்ளும் இரு முக்கியமான திட்டங்களுக்கும் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் ஒன்று நேத்ரா மார்க்-1ஏ ரேடார்கள் பொருத்தப்பட்ட 6 எம்பரர்-145-ரக விமானங்கள் ரூ.9,000 கோடி மதிப்பில் வாங்கப்படவுள்ளது. மற்றொன்று சிக்னல் இன்டலிஜென்ஸ் மற்றும் தகவல் தொடர்பு ஜாமிங் கருவிகள் பொருத்தப்பட்ட 3 ஏர்பஸ் -319 ரக விமானங்கள் ரூ.6,300 கோடி மதிப்பில் வாங்கப்படவுள்ளன.

போர் விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்பும் 6 விமானங்கள் வாங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. விமானப்படையில் ஏற்கனவே உள்ள விமானங்களை,ரூ.9,000 கோடி செலவில் எரிபொருள் நிரப்பும் விமானங்களாக மாற்றுவதற்கு விமானப்படை சம்மதம் தெரிவித்துள்ளது.

ராணுவ பயன்பாட்டுக்கு ரூ.4,000 கோடி மதிப்பில் 1000 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் நீண்ட தூர ஏவுகணைகளை சேர்க்கவும் ஒப்புதல் அளிக்கப்படவுள்ளது. மேலும் புவி அதிர்வு சென்சார் மற்றும் தொலைவில் இருந்து செயல் இழக்கச் செய்யும் வசதியுடன் கூடிய 45,000 புதிய தலைமுறை பிரச்சாந்த் பீரங்கி எதிர்ப்பு கண்ணிவெடிகளை ரூ.650 கோடிக்கு வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது

கவச வாகனங்களை தாக்கி அழிக்கும் 900 குண்டுகளை ரூ.800கோடிக்கு வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மிகவும் தாழ்வாக பறந்து வரும் பொருட்களை கண்டறிவதற்கான 25 வான் பாதுகாப்பு ரேடார்களை வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கிகப்பல்களில் பயன்படுத்துவதற்கான 48 டார்பிடோ குண்டுகளை வாங்குவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நீர்மூழ்கி கப்பல்களை தாக்கும் திறன் வாய்ந்த 24 எம்எச்-60 ரோமியோ ஹெலிகாப்டர்கள் பழுது பார்த்து மேம்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் படைத்திறனை மேம்படுத்தவும் கண்காணிப்பை பலப்படுத்தவும் பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்காக ஏர்பஸ் எஸ்இ நிறுவனத்திடம் இருந்து கடற்படைக்கு 15 கண்காணிப்பு விமானங்களை ரூ.2,900 கோடியில்இந்தியா வாங்க உள்ளது. இதற்கான முடிவை பாதுகாப்பு அமைச்சர்ராஜ்நாத் சிங் தலைமையிலான ராணுவத் தளவாட கொள்முதல் குழு எடுத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE