டெல்லி பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி அரசு வெற்றி!

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவையில் சனிக்கிழமை நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசு வெற்றி பெற்றுள்ளது. அரசுக்கு ஆதரவாக 54 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.

இது குறித்து அரவிந்த் கேஜ்ரிவால் கூறுகையில், “ஆம் ஆத்மி கட்சியில் இருந்து யாரும் விலகவில்லை. இரண்டு எம்எல்ஏக்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு உடல்நிலை சரியில்லை, சிலர் வெளியூரில் உள்ளனர்" என்றார்.

டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சிக்கு 62 இடங்களும், பாஜகவுக்கு 8 இடங்களும் உள்ளன. இந்த நிலையில், டெல்லி அரசை கவிழ்க்கும் சூழ்ச்சியில் பாஜக ஈடுபட்டு வருவதாகவும், தனது கட்சி எம்எல்ஏக்களை அக்கட்சி விலை பேசுவதாகவும் கேஜ்ரிவால் குற்றச்சாட்டு தெரிவித்தார்.

இந்த நிலையில், கேஜ்ரிவால் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசும்போது, “எங்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. அவர்களுக்கு, ரூ.25 கோடி வரை தருவதாக பேரம் பேசியுள்ளனர்.

பொய் வழக்குகள் பதிவு செய்வது மற்றும் மாநில கட்சிகளை உடைத்து ஆளும் அரசை கவிழ்ப்பதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அதுபோன்று டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களையும் கைது செய்ய நினைக்கிறார்கள். தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதால் அரசை கவிழ்க்க நினைக்கிறார்கள்.

எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் யாரும் பிரிந்து செல்லவில்லை. அவர்கள் எல்லோரும் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தவே நான் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முன்மொழிகிறேன்.

பாஜகவை பொறுத்தவரை டெல்லியில் ஆபரேஷன் லோட்டஸ் திட்டத்தை செயல்படுத்துவதில் மும்முரமாக உள்ளது. மதுபான கொள்கை விவகாரத்தை மோசடிபோல் சித்தரித்து எங்கள் கட்சியை உடைத்து ஆட்சியை கவிழ்ப்பதே பாஜகவின் திட்டம். அவர்களின் உண்மையான நோக்கம் விசாரணை நடத்துவது அல்ல. ஆம் ஆத்மி கட்சி தலைவர்களை கைது செய்து ஆட்சியை கவிழ்ப்பதே" என்று தெரிவித்திருந்தார்.

இதன்படி இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கேஜ்ரிவால் அரசு 54 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்தது. இந்த அரசு சந்திக்கும் இரண்டாவது நம்பிக்கை வாக்கெடுப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE