பிரியங்கா இல்லாமல் உத்தரப் பிரதேசத்துக்குள் நுழைந்த ராகுல் காந்தி யாத்திரை

By செய்திப்பிரிவு

வாரணாசி: ராமர் கோயிலில் பணக்காரர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரை உத்தரப் பிரதேச மாநிலத்தை எட்டியுள்ளது. பிஹாரில் இருந்து நேற்று உத்தரப் பிரதேச மாநிலத்தை வந்தடைந்தார் ராகுல். எனினும், அவரை வரவேற்க உத்தரப் பிரதேச காங்கிரஸின் முக்கிய முகமாக இருக்கும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி வரவில்லை. உடல்நலம் சரியில்லாத காரணத்தால் பிரியங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவர் வரவில்லை என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. யாத்திரையில் பங்கேற்காவிட்டாலும், ராகுல் காந்திக்கு வாழ்த்து செய்தி அனுப்பியிருக்கிறார் அவர்.

இதனிடையே, உத்தரப் பிரதேசத்தில் முதல் இடமாக கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் சந்தௌலி மாவட்டத்தில் உள்ள சையத்ராஜா என்ற இடத்தில் பேசிய ராகுல், "இந்த யாத்திரை அநீதி, சமூக அநீதிக்கு எதிராக மேற்கொள்ளப்படுகிறது. எங்கள் போராட்டம் ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு நடக்கும் அநீதிக்கு எதிரானது." என்று கூறியவர் ராமர் கோயில் குறித்தும் பேசினார்.

அதில், "ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை நீங்கள் அனைவரும் டிவியில் பார்த்தீர்கள். இந்த கும்பாபிஷேக விழாவில் ஏழைகள் யாரேனும் பார்த்தீர்களா?. அல்லது எந்த தொழிலாளியையாவது பார்த்தீர்களா, விவசாயிகளையாவது பார்த்தீர்களா?. ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் இந்தியாவின் பல பணக்காரர்கள் கலந்து கொண்டனர். அங்கு அவர்களுக்கு சிவப்புக் கம்பளம் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால் ஏழைகளோ, விவசாயிகளோ, தொழிலாளர்களோ அங்கு காணப்படவில்லை. இது அநீதி. ஏழைகள் மற்றும் தலித்துகளுக்கு அநீதி இழைக்கப்படுவதால் வெறுப்பு அதிகரித்து வருகிறது.

இந்த யாத்திரையில் நாங்கள் நீண்ட உரைகளை பேசுவதில்லை. நாங்கள் மக்களைச் சந்திக்கிறோம், அவர்களுடன் பழகுகிறோம். இதன் மூலம் அவர்களின் பிரச்சினைகளை அறிந்து அவற்றைத் தீர்க்க முயற்சிகளை மேற்கொள்வோம். விவசாயிகள் மற்றும் ஏழைகளின் பிரச்சனைகளை ஊடகங்கள் காட்டவில்லை.” என்றார்.

முன்னதாக, நேற்றிரவு சந்தௌலி தங்கியிருந்த ராகுல் காந்தி, இன்று வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் வழிபாடு நடத்த இருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE