மக்களவைத் தேர்தல் | சுப்ரியா சுலேவுக்கு எதிராக சுனேத்ரா: அஜித் பவாரின் வியூகம்

By செய்திப்பிரிவு

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மகாராஷ்டிராவின் துணை முதல்வருமான அஜித் பவார், இந்த முறை புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று பாராமதி தொகுதி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் அவர் பேசியிருந்தாலும் அவரது பேச்சு வரும் மக்களவைத் தேர்தலில் பாராமதியில் சுப்ரியா சுலேவுக்கு எதிராக தனது மனைவியை அவர் நிறுத்தலாம் என்ற ஊகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து அரசியல் கட்சிகளும் 2024 மக்களவைத் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வரும் நிலையில், அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே மகாராஷ்டிராவின் பாராமதி தொகுதி எதிர்பார்ப்புக்குள்ளான ஒன்றாக மாறியுள்ளது. இந்த முறை அங்கு பவார் குடும்பத்தின் தலைவர்களுக்குள் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாராமதி மக்களவைத் தொகுதி பாரம்பரியமாக சரத் பவார் மற்றும் அவரது மகள் சுப்ரியா சுலேவின் கோட்டையாக விளங்கி வருகிறது. என்றாலும் வரும் மக்களவைத் தேர்தலில் அத்தொகுதியின் தற்போதைய எம்.பி., சுப்ரியாவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தும் எண்ணத்தை அஜித் பவார் வெளிப்படுத்தியுள்ளார். அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிதான் உண்மையான என்சிபி என்று மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நர்வேகர் அறிவித்தற்கு அடுத்த நாள் பாராமதியில் கட்சித் தொண்டர்களிடம் பேசிய அஜித் பவார் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “இதுவரை தேர்தலில் போட்டியிடாத ஒருவரை நான் வேட்பாளராக நிறுத்துவேன் என்றும், அந்த வேட்பாளருக்கு அனுபவம் மிக்கவர்களின் ஆதரவு உண்டு என்றும், புதியவரான தனது வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். அவரது இந்தப் பேச்சு பாராமதி தொகுதியில் அஜித் பவார் தனது மனைவி சுனேத்ரா பவாரை நிறுத்துவார் என்ற ஊகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே பாராமதி தொகுதியில் சுனேத்ரா பவார் ஏற்கனவே ஒரு விளம்பரப்பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அஜித் பவாரின் மனைவியான சுனேத்ராவும் அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது சகோதரரான பதம்சிங் பாட்டீல் ஒரு மூத்த அரசியல்வாதி மற்றும் முன்னாள் அமைச்சருமாவார். சுனேத்ரா பாராமதியில் செய்த சமூகசேவைகளுக்காக அங்கு நன்கு அறியப்பட்டவர்.

அவர் கடந்த 2010-ம் ஆண்டு நிறுவப்பட்ட என்விரான்மெண்டல் ஃபோரம் ஆஃப் இந்தியா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நிறுவியவர். இந்தியாவில் ‘எக்கோ வில்லேஜ்’ என்ற கருத்தை புகுத்தியதில் வழிகாட்டியவர் என்று அவரது இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

பாராமதி தொகுதியில் சுனேத்ராவின் பணிகளுக்கு அஜித் பவார் தீவிரமாக ஆதரவளித்து வருவதாக கூறப்படுகிறது. சுனேத்ராவின் புகைப்படம் தாங்கிய விளம்பர வாகனம் ஒன்று அந்தப் பகுதியில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதில் அஜித் பவார் சுனேத்ரா ஜோடி படங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர்களும் இடம்பெற்றுள்ளன.

பாராமதி மக்களவைத் தொகுதியும் பவார் குடும்பமும்: என்சிபியின் மூத்த தலைவரான சரத் பவார், கடந்த 1967, 1972, 1978, 1980, 1985 மற்றும் 1990 ஆகிய சட்டப்பேரவைத் தேர்தலில்களிலும், 1984, 1996, 1998, 1999 மற்றும் 2004 ஆகிய மக்களவைத் தேர்தல்களிலும் பாராமதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். அதேபோல் கடந்த மூன்று மக்களவைத் தேர்தல்களிலும் பாராமதி தொகுதியை சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார்.

தற்போது மகாராஷ்டிராவின் துணைமுதல்வராக இருக்கும் அஜித் பவார் கடந்த 1991ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாராமதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 1991, 1995, 1999, 2004, 2009, 2014 மற்றும் 2019 ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில் பாராமதி தொகுதியில் இருந்து அவர் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE