நண்பர் நிதிஷுக்கு எப்போதும் கதவு திறந்தே இருக்கும்: லாலு உணர்ச்சிகரம்

By செய்திப்பிரிவு

பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) - ஆர்ஜேடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அண்மையில் ஆர்ஜேடி கூட்டணியிலிருந்து விலகிய நிதிஷ் குமார் மீண்டும் பாஜகவுடன் இணைந்து கூட்டணி அமைத்து பிஹார் முதல்வராக பொறுப்பேற்றார். இண்டியா கூட்டணியை வலிமையாக்க தான் எடுத்த முயற்சிகளுக்கு உரிய ஒத்துழைப்பு இல்லை என்பதால் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் சிறுநீகர மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு பொதுவெளியில் நீண்ட காலம் தலைகாட்டாமல் இருந்த லாலு பிஹார் சட்டப்பேரவைக்கு கடந்த வியாழனன்று வருகை தந்தார். அப்போது லாலுவும், நிதிஷும் சந்தித்து கொண்டு பரஸ்பரம் நலம் விசாரித்து கைகுலுக்கிக் கொண்டனர்.

இந்த நிலையில் மீண்டும் ஆர்ஜேடி-ஜேடியு கூட்டணி அமைய வாய்ப்புள்ளதா என்ற செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, லாலு கூறுகையில் “ அவர் (நிதிஷ் குமார்) திரும்பி வரட்டும் பிறகு பார்ப்போம். அவருக்காக எங்கள் கூட்டணி கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்’’ என்றார்.

1970-களில் மாணவர் சங்க தலைவராக இருந்த காலத்திலிருந்தே லாலுவின் நெருங்கிய நண்பராக விளங்கியவர் நிதிஷ். அந்த நட்பை சிறப்பிக்கும் விதமாகவே லாலு இவ்வாறு கூறியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, ஜேடியு தலைமைச் செய்தி தொடர்பாளரும், எம்எல்சியுமான நீரஜ் குமார் கூறுகையில், “ இந்த விவகாரத்தில் நிதிஷ் குமார் ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டார். எனவே, மீண்டும் ஆர்ஜேடியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE