டெல்லி | பாஜக தேசிய கவுன்சில் கூட்டம்: முக்கிய தீர்மானங்கள் நிறைவேற வாய்ப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் இரண்டு நாள் தேசிய கவுன்சில் கூட்டம் டெல்லி பாரத் மண்டபத்தில் இன்று தொடங்குகிறது. இதில் அக்கட்சியின் 11,000 நிர்வாகிகள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

மக்களவைத் தேர்தல் இம்மாத இறுதியில் அறிவிக்கப்படலாம் எனக் கூறப்படுகிற நிலையில், அதற்கான பணிகளை துரிதப்படுத்தியுள்ளது மத்தியில் ஆளும் பாஜக. இம்முறை 370+ இடங்களை வெல்ல வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ள பாஜக, அதற்கு தயாராகும் பொருட்டு புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் அக்கட்சியின் இரண்டு நாள் தேசிய கவுன்சில் கூட்டம் கூட்டியுள்ளது. இதில் தேசிய அளவில் உள்ள அக்கட்சியின் 11,000 நிர்வாகிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துகொள்ள இருக்கிறார். இன்று காலை 9.30 மணிக்கு இம்மாநாடு தொடங்கியுள்ளது.

இன்று பிற்பகல் 3:00 மணிக்கு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உரையாற்ற இருக்கிறார். நாளை பிரதமர் மோடியின் உரையுடன் கவுன்சில் கூட்டம் மாநாடு நிறைவடைய உள்ளது. பொதுச் செயலாளர்கள், கட்சியின் பல்வேறு அணித் தலைவர்கள், தேசிய செயற்குழு, தேசிய கவுன்சில் நிர்வாகிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள மாவட்ட தலைவர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், மக்களவை பொறுப்பாளர்கள், செய்தி தொடர்பாளர்கள், தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் என மொத்தம் 11,000 பேர் இந்த இரண்டு நாள் மாநாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கவுன்சில் கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒன்று அரசியல் தொடர்பானதாகவும், மற்றொன்று பொருளாதாரம், சமூகம் மற்றும் ராமர் கோயில் தொடர்பான தலைப்புகளின் அடிப்படையிலும் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இதனிடையே, இந்த இரண்டு நாள் தேசிய கவுன்சில் கூட்டத்துக்கு முன்னதாக, டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பாஜக தேசிய மாநாட்டின் கண்காட்சியை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE