‘இரண்டு கைகள் நான்கானால்...’ - ராகுலை வைத்து ஜீப் ஓட்டி வந்த தேஜஸ்வி

By செய்திப்பிரிவு

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை அமரவைத்து பிஹார் மாநில முன்னாள் துணை முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) தலைவருமான தேஜஸ்வி யாதவ் ஜீப் ஓட்டினார். தற்போது பிஹாரில் ராகுல் யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை பிஹாரின் சசாரம் வந்த ராகுல் காந்தியை, தேஜஸ்வி யாதவ் கட்டித் தழுவி வரவேற்றார். பின்னர் ராகுல் காந்தியை ஜீப்பில் அமர வைத்து ஜீப்பை ஓட்டினார்.

யாத்திரையின்போது பொதுமக்களிடம் ராகுல் காந்தி பேசியதாவது: நடைபயணம் செல்லும் இடங்களில் எல்லாம் மத்திய அரசுக்கு எதிரான புகார்களை மக்கள் தெரிவிக்கின்றனர். வரும் தேர்தலில் பிஹாரில் தேஜஸ்வி யாதவ் அபார வெற்றி பெறுவார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு, விவசாயிகளை வாட்டி வதைக்கிறது. விவசாயிகள் கேட்கும், குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டத்தை அவர்களால் அமல்படுத்த முடியவில்லை. இவ்வாறு பேசினார்.

தேஜஸ்வி யாதவ் பேசியதாவது: பிஹாரில் நிதிஷ் குமாருடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்தபோது 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கவேண்டும் என்று கூறினேன். அப்போது நிதிஷ் குமார் என்னைக் கிண்டல் செய்தார். ஆனால் அவரை நாம் வேலை செய்ய வைத்தோம். இதன்மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கினோம். பிஹாரில் கூட்டணி ஆட்சி நடந்த 17 மாதத்தில் நல்ல திட்டங்களை வழங்கினோம்.

கட்சியை மாற்றி ஆட்சியில் அமர்ந்துள்ள முதல்வர் நிதிஷ் குமார் மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளார். எதற்காக அவர் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் என்று மக்களிடம் கூறவேண்டும். இவ்வாறு பேசினார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE