“மேகேதாட்டு அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார்” - பட்ஜெட்டில் கர்நாடக முதல்வர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

பெங்களூரு: காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கர்நாடக பட்ஜெட் அறிவிப்பின்போது தெரிவித்தார்.

கர்நாடக மாநில சட்டப்பேரவையில் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அம்மாநில முதல்வரும், நிதியமைச்சருமான சித்தராமையா பட்ஜெட் தாக்கல் செய்து பேசுகையில், "மேகேதாட்டு அணை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார். அணையை கட்ட ஒரு மண்டல குழுவும், இரண்டு துணை மண்டல குழுக்களும் என சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவினர் தற்போது அணை கட்டும்போது நீர் செல்லும் நிலப்பரப்புகள், வெட்டப்பட வேண்டிய மரங்கள் ஆய்வு செய்யும் பணியை முடித்துள்ளனர். அணை கட்டும் பகுதியில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தவும் ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன. மத்திய அரசு அனுமதிக்காக காத்திருக்கிறோம். மத்திய அரசு அனுமதி அளித்ததும் மேகேதாட்டு அணை கட்டப்படும். முன்னுரிமை அடிப்படையில் மேகேதாட்டு அணை திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிப்ரவரி 1-ம் தேதி நடைபெற்ற காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகேதாட்டு அணையைக் கர்நாடகம் கட்டிக் கொள்ளலாம் என்ற தீர்மானத்தை ஆணையத் தலைவர் எஸ்.கே. ஹல்தர் நிறைவேற்றினார்.

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்ட நிகழ்ச்சி நிரலில் மேகேதாட்டு அணை குறித்த பொருளை முன்வைத்தால் அக்கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்வதாகக் கூறி, இதுவரை தடுத்து வந்த தமிழக அரசின் நீர்வளத் துறைச் செயலர் கலந்து கொண்டது தமிழகத்தில் சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்த நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா பட்ஜெட்டில் மேகேதாட்டு அணை குறித்து பேசியிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE