புதுடெல்லி: விவசாயிகளின் டெல்லி செல்லும் போராட்டம் நான்காவது நாளை எட்டியுள்ள நிலையில் விவசாய அமைப்புகள் இன்று பாரத் பந்த்-க்கு அழைப்பு விடுத்து நடத்தி வருகின்றன. இதனிடையே, மத்திய அரசு மற்றும் விவசாய சங்கங்கள் இடையே ஞாயிற்றுக்கிழமை (பிப்.18) மீண்டும் பேச்சுவார்த்தை நடக்க இருக்கிறது. நேற்று நடந்த 3-வது கட்ட பேச்சு வார்த்தை தோல்வியடைந்து, தங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் நடத்தி வரும் டெல்லி சலோ பேரணியில் பங்கேற்கவில்லை என்றாலும், அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் கடந்த 2020 - 21 விவசாயிகள் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த சம்யுக்த் கிஷான் மோர்ச்சா மற்றும் மத்திய தொழிற்சங்கங்கள் நாடுதழுவிய அளவில் பாரத் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. இன்று காலை 6 மணிக்குத் தொடங்கிய பாரத் பந்த் மாலை 4 மணி வரை நடைபெற இருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பகல் 12 மணி முதல் 4 மணி வரை இந்தியா முழுவதும் சாலைகளில் மிகப்பெரிய அளவிலான சக்கா ஜாம் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த நிலையில் நொய்டா மற்றும் கவுதம புத்தர் நகர் பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத கூட்டங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் அதன் தேசிய தலைநகர் பகுதிகளில் ஏற்கனவே 144 தடை உத்தரவு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
வேளாண் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்துதல், குறைந்தபட்ச ஓய்வுதியம், குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட 21 கோரிக்கைகளை வலியுறுத்தி 9 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த மூத்தத் தலைவர்கள் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த உள்ளனர். ஹரியாணா சாலைப்போக்குவரத்து தொழிலாளர்கள் பாரத் பந்துக்கு தங்களின் ஆதரவினைத் தெரிவித்துள்ளனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக மூன்று மணிநேரம் சுங்கச்சாவடிகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே டெல்லி செல்லும் தங்களின் பேரணியை தொடர்வதில் விவசாயிகள் உறுதியாக இருப்பதால் பஞ்சாப் -ஹரியாணா எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. முன்னதாக, சண்டிகரில் மத்திய அமைச்சர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இடையிலான 3-ம் கட்ட பேச்சுவார்த்தை வியாழக்கிழமை (பிப்.15) நடைபெற்றது. வெள்ளிக்கிழமை அதிகாலை வரை நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில், தங்களது போராட்டம் தொடரும் என விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். 3-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமை அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார்.
சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200 விவசாய அமைப்புகளைச் சேர்ந்த விவசாயிகள், அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப் பாதுகாப்பு, விவசாய கடன் ரத்து, சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரையை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பஞ்சாப்பில் இருந்து பிப்.13-ம் தேதி டெல்லி நோக்கி செல்லும் பேரணியை தொடங்கினர். இப்பேரணி பஞ்சாப் - ஹரியாணா, ஹரியாணா - டெல்லி எல்லைகளைக் கடந்து தேசிய தலைநகரை அடைய திட்டமிடப்பட்டது.
விவசாயிகளின் பேரணி பஞ்சாப்பில் இருந்து காலை 10 மணிக்கு தொடங்கி இரண்டு மணிநேரம் கழித்து ஹரியாணா எல்லையான ஷம்புவை அடைந்தது. இந்த நிலையில், போராட்டக்காரர்கள் மீது ஹரியாணா போலீஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி தடுத்து நிறுத்தினர். இரண்டாவது புதன்கிழமையும் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டன. இதனிடையே வியாழக்கிழமை 3 வது கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறப்பட்டதால் விவசாயிகள் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் ஹரியாணா எல்லையில் நிலைகொண்டிருந்தனர். இந்த நிலையில் 3 வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 mins ago
இந்தியா
14 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago