“மோடியின் ஊழல் கொள்கைக்கு சான்று!” - எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்து @ தேர்தல் பத்திரம் தீர்ப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “தேர்தல் பத்திரங்களை லஞ்சம், கமிஷன் வாங்குவதற்கான தளமாக பாஜக மாற்றியுள்ளது. மோடியின் ஊழல் கொள்கைகளுக்கு மற்றொரு சான்றாக உள்ளது” என்று தேர்தல் பத்திரம் திட்டம் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் குறிப்பிட்டு காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். இதேபோல், பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.

தேர்தல் பத்திரம் சட்டவிரோதமானது என்றும், வங்கிகள் அவற்றை விற்பனை செய்ய தடை விதிப்பதாகவும் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ள நிலையில், 2016 முதல் 2022 வரை ரூ.16,000 கோடி அளவில் தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில், இதில், பாஜக ரூ.10,122 கோடியை ஈட்டியுள்ளது.இந்தப் பின்னணியில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்க்கட்சிகள் வெகுவாக வரவேற்றுள்ளன.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கபில் சிபல்: “இது அரசியல் கட்சியை வளப்படுத்தும் திட்டம் என்று நான் பல ஆண்டுகளாக கூறி வருகிறேன். இது தேர்தலுக்காக அல்ல. தேர்தல் பத்திரங்கள் என்பது முழுக்க முழுக்க தவறானது. இதற்கும், தேர்தலுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. இது கார்ப்பரேட் துறைக்கும், பாஜகவுக்கும் இடையேயான பிணைப்பு.”

காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி:நரேந்திர மோடியின் ஊழல் கொள்கைகளுக்கு மற்றொரு சான்றாக இது உங்கள் முன் உள்ளது. தேர்தல் பத்திரங்களை லஞ்சம் மற்றும் கமிஷன் வாங்குவதற்கான தளமாக பாஜக மாற்றியுள்ளது. இன்று இந்த விவகாரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.”

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே: “தேர்தல் பத்திரம் திட்டத்தை துவங்கியபோதே அது ஜனநாயகத்துக்கு விரோதமானது என காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. மோடி அரசின் தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்வோம் என்று 2019-ல் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. கருப்புப் பணத்தை மாற்றும் மோடி அரசின் இத்திட்டத்தை சட்டவிரோதம் என்று கூறி, வழங்கிய தீர்ப்பை வரவேற்கிறோம்.”

சிவசேனா (யுபிடி) தலைவர் ஆனந்த் துபே: “இது மிகப் பெரிய தீர்ப்பு. தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் கீழ், அரசியல் கட்சிகள் மற்றும் அரசு எங்கிருந்து நிதி பெறுகின்றன என்பதை தெரிவிக்க வேண்டும்.”

மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி: “கொள்கை அளவில், தேர்தல் பத்திரங்களை ஏற்காத ஒரே கட்சி சிபிஐ(எம்) மட்டுமே. ஊழலுக்கு எதிரான இந்த அரசாங்கத்தின் கூற்றுகளை இது அம்பலப்படுத்தியுள்ளது.”

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்: “தேர்தல் பத்திரம் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததை வரவேற்கிறேன். இந்தத் தீர்ப்பு வெளிப்படைத்தன்மைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.”

தமிழக முதல்வர் ஸ்டாலின்: “தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புக்கு முரணானது என்று உச்ச நீதிமன்றம் சரியாகவே கூறியுள்ளது. இது வெளிப்படையான தேர்தல் செயல்முறையை உறுதி செய்யும். இந்த தீர்ப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனநாயகம் மற்றும் சமநிலையை மீட்டெடுத்துள்ளது. இந்த சிஸ்டம் மீதான சாமானியர்களின் நம்பிக்கையையும் தீர்ப்பு உறுதி செய்துள்ளது.”

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி: “இந்த திட்டங்களுக்கு இதுபோன்று தடை விதித்தால் தான் எங்களை போன்றவர்கள் கட்சி நடத்த முடியும். அதிமுக இந்த தீர்ப்பை வரவேற்கிறது.”

தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி: “தேர்தல் பத்திரம் திட்டம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனதார வரவேற்கிறேன். இதன்மூலம் ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருக்கிற மத்திய பாஜக, கார்ப்பரேட்டுகளின் உதவியோடு தேர்தல் நிதி குவிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.”

இந்திய கம்யூ. மாநிலச் செயலாளர் முத்தரசன்: “பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் கூட்டுக் களவாணியாக செயல்படும் பாஜக மக்கள் வாக்குரிமையை தேர்தல் சந்தையில் வாங்கும் பண்டமாக மாற்றி சிறுமைப்படுத்தி வந்ததை உச்ச நீதிமன்ற உத்தரவின் மூலம் தடுத்து நிறுத்தியுள்ளது. இதன்மூலம் வாக்குகள் மூலம் ஆட்சி அமைக்கும் அதிகாரம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.”

மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: “ஊழலுக்கு எதிராக போராடுவதாகச் சொல்லிக் கொள்ளும் பாஜகவின் பெரிய மிகப் பெரிய ஊழல் இது. அதிகாரம் அவர்கள் கைகளில் இருக்கும் வரை, இத்தகைய பித்தலாட்டச் செயல்களை அரங்கேற்றத் துளியும் தயங்காத பாசிச சக்திகளின் முகத்திரையை இந்திய நீதித்துறை கிழித்தெறிந்து இருக்கிறது. வெளிப்படைத் தன்மையில்லாத பிஎம் கேர் நிதிக்கும் இதேபோல் ஒரு தீர்ப்பு வர வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பு.”

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சொல்வது என்ன? - "தேர்தல் பத்திரம் முறை மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. தேர்தல் பத்திரம் நன்கொடைக்காக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது சட்டவிரோதம். தற்போதைய விதிகளின்கீழ் தேர்தல் பத்திரம் முறை சட்டவிரோதமாக உள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் அரசியல் சாசன பிரிவு 19(1) ஆகியவற்றை மீறும் வகையில் தேர்தல் பத்திர முறை உள்ளது.

தேர்தல் பத்திரம் முறை திட்டத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றால், அதனை ரத்து செய்யலாம். கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்சிகளுக்கு நிதி தரும்போது அதற்கு கைமாறு எதிர்பார்க்க வாய்ப்பு உள்ளது. கருப்புப் பணத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தை அடைய தேர்தல் பத்திரங்களைத் தவிர வேறு வழிகள் உள்ளன.

அரசிடம் கணக்கு கேட்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது என்பதை பல தருணங்களில் நீதிமன்றங்கள் சொல்லியுள்ளன. நன்கொடை தருவோர் குறித்த விவரங்களை தெரிவிக்கத் தேவையில்லை என்பது வாக்காளர்களின் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது. எனவே, தேர்தல் நன்கொடை அளிக்க வகை செய்த வருமான வரி திருத்தச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ திருத்தச் சட்டம் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. தேர்தல் பத்திரம் முறை தொடர்பான மற்ற சட்டத் திருத்த மசோதாக்களும் ரத்து செய்யப்படுகின்றன. தேர்தல் பத்திரம் சட்டம் மட்டுமின்றி, கம்பெனி சட்டத் திருத்த மசோதாவும் ரத்து செய்யப்படுகிறது.

தேர்தல் பத்திரம் நிதி விவரங்களை வழங்காமல் இருப்பதற்கு உரிய காரணம் தெரிவிக்கப்படவில்லை. 2019-ம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்தோர் விவரங்களை எஸ்பிஐ வங்கி வெளியிட வேண்டும். தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட அனைத்து பங்களிப்பின் விவரங்களை மார்ச் 6-க்குள் வழங்க வேண்டும். அதேபோல், நன்கொடை கொடுத்தோர் குறித்த விவரங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் ஏப்ரல் 13-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும்" என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் பெற்ற நன்கொடை: புள்ளிவிவரங்களின்படி, கடந்த 6 ஆண்டுகளில் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரம்:

பாஜக - ரூ.6,570 கோடி
காங்கிரஸ் - ரூ.1,123 கோடி
பிஆர்எஸ் - ரூ.912 கோடி
திரிணமூல் காங். - ரூ.823
பிஜு ஜனதா தளம் - ரூ.774
திமுக - ரூ.616 கோடி
ஒய்எஸ்ஆர் காங். - ரூ.381 கோடி
மார்க்சிஸ்ட் - ரூ.367 கோடி
தேசியவாத காங். - ரூ.231 கோடி
பகுஜன் சமாஜ் - ரூ.85 கோடி
இந்திய கம்யூ. - ரூ.13 கோடி

வழக்கின் பின்னணி: கடந்த 2017-18-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தேர்தல் பத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் கடந்த 2018-ம் ஆண்டில் அமலுக்கு வந்தது. இதன்படி பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட வங்கி கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும். பொதுவாக ஒரு மாதத்தில் 10 நாட்களுக்கு மட்டுமே தேர்தல் பத்திரங்கள் வழங்கப்படும். எனினும் தேர்தல் காலத்தில் மட்டும் ஒரு மாதத்தில் 30 நாட்கள் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.

தனிநபர்கள், நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். ஒரு நபர், நிறுவனம் எத்தனை பத்திரங்களை வேண்டுமானாலும் வாங்கலாம். இந்த பத்திரங்களில் வாங்குபவரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் இருக்காது. 15 நாட்களுக்குள் பத்திரத்தை பணமாக மாற்ற வேண்டும். இல்லையெனில் தேர்தல் பத்திரங்களின் தொகை பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும். தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன.

இந்த திட்டத்தை ரத்து செய்யக் கோரி ஏடிஆர், காமன் கேஸ் உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. கடந்த 6 ஆண்டுகளாக விசாரணை நீடித்தது. கடந்த ஆண்டு முதல் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE