“அரசியல் எனக்கானது அல்ல... எம்.பி பதவியை ராஜினாமா செய்கிறேன்” - நடிகை மிமி சக்ரவர்த்தி

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினரும், நடிகையுமான மிமி சக்ரவர்த்தி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறார். தனது ராஜினாமா கடிதத்தை அவர் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியிடம் அளித்துள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நடிகை மிமி சக்ரவர்த்தி கடந்த மக்களவைத் தேர்தலில் ஜாதவ்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்முறை எம்.பி ஆனார். இந்நிலையில், கொல்கத்தாவில் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியை இன்று சந்தித்த மிமி சக்ரவர்த்தி, அவரிடம் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மிமி சக்ரவர்த்தி, "இன்று கட்சித் தலைவரை சந்தித்தேன். எனது ராஜினாமா கடிதத்தை அவரிடம் கொடுத்தேன். இத்தனை ஆண்டுகளில் எனக்கு கிடைத்த புரிதல் என்னவென்றால், அரசியல் எனக்கானது அல்ல. எனக்கு அதில் விருப்பம் இல்லை" என கூறினார்.

மக்களவை சபாநாயகரிடம் ராஜினாமா கடிதத்தைக் கொடுக்காமல் கட்சித் தலைவரிடம் கொடுத்தது ஏன் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த மிமி சக்ரவர்த்தி, "கட்சியின் ஒப்புதலுக்காக கொடுத்துள்ளேன். ஒப்புதல் கிடைத்ததும் மக்களவை சபாநாயகரிடம் கொடுப்பேன்" என தெரிவித்துள்ளார். இன்னும் இரண்டு மாதங்களில் மக்களவைத் தேர்தல் வர உள்ள நிலையில், மிமி சக்ரவர்த்தி தனது எம்பி பதவியை ராஜினாமா செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE