“உடல்நிலையால் போட்டியிட முடியவில்லை” - ரேபரேலி தொகுதி மக்களிடம் சோனியா காந்தி உருக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அடுத்த நாள், "உடல்நிலை காரணமாக மக்களவைத் தேர்தலில் போட்டியிட முடியவில்லை" என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் சோனியா காந்தி விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து மிகவும் உருக்கமாக ஒரு கடிதம் எழுதியுள்ளார். அவர் தனது கடிதத்தில், "நான் இன்று என்னவாக இருக்கிறேனோ, அது உங்களாலேயே என்று சொல்வதில் நான் பெருமைபடுகிறேன். உங்களின் நம்பிக்கையை மதிக்கும் விதமாக என்னால் முடிந்த அனைத்து விஷயங்களையும் செய்து வருகிறேன். தற்போது உடல்நிலை மற்றும் வயது மூப்பு காரணமாக வரும் மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. எனது இந்த முடிவுக்குப் பின்னர் என்னால் நேரடியாக உங்களுக்கு சேவை செய்ய முடியாது. ஆனால், எனது எண்ணங்களும் மனதும் எப்போதும் உங்களுடனேயே இருக்கும்.

ரேபரேலி தொகுதியுடனான நெருங்கிய உறவு மிகவும் பழமையானது. ரேபரேலியுடன் எங்களின் குடும்பத்தின் உறவு மிகவும் ஆழமானது. நாடு சுதந்திரமடைந்த பின்னர் நடந்த முதல் மக்களவைத் தேர்தலில் எனது மாமனார் ஃபெரோஸ் காந்தியை வெற்றி பெறச் செய்து நீங்கள் டெல்லிக்கு அனுப்பி வைத்தீர்கள். அவருக்கு பின்னர் எனது மாமியார் இந்திரா காந்தியை வெற்றியடையச் செய்து உங்களுக்கு சொந்தமாக்கினீர்கள். அதிலிருந்து வாழ்க்கையின் கடினமான பாதைகளில் உள்ள ஏற்ற இறக்கங்களுடன் அந்த அன்பின் வரிசை தற்போது வரை உற்சாகத்துடனும் பாசத்துடனும் தொடர்கிறது. எங்களின் நம்பிக்கையும் அதிகமாகியுள்ளது.

இந்தப் பிரகாசமான பாதையில் நடக்க நீங்கள் எனக்கும் ஒரு வாய்ப்பளித்தீர்கள். என் மாமியார் மற்றும் எனது வாழ்க்கைத் துணையை நிரந்தரமாக இழந்து நான் உங்களிடம் வந்தபோது என்னை நீங்கள் இருகரம் நீட்டி அரவணைத்துக் கொண்டீர்கள். கடந்த இரண்டு தேர்தல்களில் இக்கட்டான சூழ்நிலைகளிலும் என் பக்கம் நீங்கள் காட்டிய உறுதி நான் எப்போதும் மறக்கவே மாட்டேன். நான் இப்போது என்னவாக இருக்கிறேனோ, அது உங்களால்தான் என்பதை சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன். அந்த நம்பிக்கைக்கு உண்மையாக வாழ முயல்வேன்" என்று சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1997 டிசம்பரில் சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவர் கட்சியில் சேர்ந்த சில மாதங்களில் காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 1999-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் சோனியா காந்தி முதல்முறையாக போட்டியிட்டார். பின்னர் அவரது அடுத்தடுத்த நிலையில் எதிர்க்கட்சி தலைவராக உயரந்தார், பின்னர் 2004-ம் ஆண்டு உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதிக்கு மாறினார்.

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி, ராஜஸ்தானில் நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். ஐந்து முறை மக்களவை உறுப்பினராக பணியாற்றிய சோனியா காந்தி, முதல் முறையாக மாநிலங்ளவை உறுப்பினராக பதவி ஏற்க இருக்கிறார். ராஜஸ்தான் சட்டப்பேரவையில் காங்கிரஸுக்கு போதிய எம்எல்ஏக்கள் உள்ளநிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வரும் ஏப்ரல் மாதத்தில் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து காலியாகும் இடத்தில் சோனியா தேர்ந்தெடுக்கப்பட்டு மாநிலங்களவைக்கு முதல் முறையாக நுழைய இருக்கிறார்.

கடந்த 1964 ஆகஸ்ட் முதல் 1967 பிப்ரவரி வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பின்னர் காந்தி குடும்பத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக நுழைய இருப்பவர் சோனியா காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE