காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் பாஜகவில் இணைந்தார்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் விபாகர் சாஸ்திரி நேற்று காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணைந்தார்.

கடந்த சில வாரங்களாக காங்கிரஸ் கட்சியை விட்டு பலர் விலகி வருகின்றனர். மகாராஷ்டிராவில் மிலிந்த் தியோரா, பாபா சித்திக், அசோக் சவாண் ஆகிய மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து விலகியுள்ளனர். இவர்களில் முன்னாள் மத்திய அமைச்சரான மிலிந்த் தியோரா, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவிலும் முன்னாள் எம்எல்ஏவான பாபா சித்திக், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியிலும் சேர்ந்தனர். மகாராஷ்டிர முன்னாள் முதல்வரான அசோக் சவாண் பாஜகவில் சேர்ந்தார்.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் விபாகர் சாஸ்திரி நேற்று காங்கிரஸ் கட்சியை விட்டு விலகினார். பிறகு அவர் உ.பி. துணை முதல்வர் பிரஜேஷ் பதக் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

இதுகுறித்து விபாகர் சாஸ்திரி கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், லால் பகதூர் சாஸ்திரியின் ‘ஜெய் ஜவான், ஜெய் கிசான்’ என்ற தொலைநோக்கு பார்வையை மேலும் வலுப்படுத்துவதன் மூலம் நாட்டுக்கு சேவையாற்ற முடியும் என நினைக்கிறேன்” என்றார்.

காந்தியவாதியான லால் பகதூர் சாஸ்திரி 1964-ல் ஜவஹர்லால் நேருவின் மறைவுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஆனார். அவர் சிக்கனத்திற்கு பெயர் பெற்றவர். 1965-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரின்போது இந்தியாவை வழிநடத்தினார். 1961 முதல்1963 வரை மத்திய உள்துறை அமைச்சராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE