புல்வாமா தாக்குதல் 5-ம் ஆண்டு நினைவு தினம்: 40 வீரர்களின் உயிர்த்தியாகத்தை நாடு என்றும் நினைவுகூரும் - பிரதமர் மோடி அஞ்சலி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: புல்வாமா தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் 5-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு 2,547 துணை ராணுவப் படை வீரர்களை ஏற்றிக்கொண்டு 78 ராணுவ வாகனங்கள் வரிசையாக சென்று கொண்டிருந்தன. அன்று மதியம் 3.30 மணியளவில் ராணுவ வாகனங்கள் புல்வாமா பகுதியில் சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென்று ஒரு கார் வேகமாக வந்து, துணை ராணுவப் படையினர் வந்து கொண்டிருந்த ஒரு பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது.

அந்தக் காரில் வெடிகுண்டு நிரப்பப்பட்டிருந்தது. இதனால், அந்தக் கார் மோதிய பேருந்து வெடித்துச் சிதறியது. இதில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகம்மது பொறுப்பேற்றது.

இந்த புல்வாமா தாக்குதலின் 5-வது நினைவு தினமான நேற்று பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “புல்வாமாவில் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். நம் நாட்டுக்காக அவர்கள் செய்த சேவையும் தியாகமும் என்றும் நினைவுகூரப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “புல்வாமா தாக்குதலில் தாய்நாட்டுக்காக உயிர்நீத்தவீரர்களுக்கு தலைவணங்குகிறேன். அந்த வீரர்களுக்கு நாடு என்றும் கடன்பட்டிருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் பக்கத்தில், “இந்தியாவை பாதுகாப்பதற்காக தங்கள்உயிரைத் தியாகம் செய்த வீரர்களுக்கு என் பணிவான வணக்கத்தை செலுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE