விளைப் பொருட்களுக்கு ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மின்சார சட்டத்திருத்த மசோதா ரத்து, விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், டெல்லிக்குள் விவசாயிகள் நுழையாமல் இருக்க, எல்லையில் தடுப்புகள் போடப்படும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி நுழைபவர்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்துகிறது. என்ன நடக்கிறது டெல்லியில்..?
கடந்த 2020-ம் ஆண்டு விவசாயிகள் வேளாண் சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராட்டத்தை நடத்தினர். அப்போதே குறைந்தபட்ச ஆதார விலை கோரிக்கையை முன்வைத்திருந்தனர். ஆனால், மத்திய அரசு அதை நிறைவேற்றவில்லை என்னும் குற்றச்சாட்டை முன்வைத்து கடந்த 13-ம் தேதி போராட்டத்தை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். கடந்த 12-ம் தேதி இரண்டு மத்திய அமைச்சர்கள் தலைமையில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால், ஹரியாணா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கிப் பேரணியை செல்லத் தொடங்கினர். 'டெல்லி சலோ' என்ற இந்தப் போராட்டத்துக்குப் பெயரும் வைத்தனர். சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
ஆனால், இவர்களின் நுழைவைத் தடுக்கும் வகையில், முள் வலையங்கள், கான்கிரிட் தடுப்புகள் டெல்லி எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டு வருகிறது. ட்ரோன் கேமரா வாயிலாகக் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டன. விவசாயிகள் போராட்டம் குறித்தான உளவுத் துறை சமர்பித்த ரிப்போர்ட் குறித்த தகவல்கள் வெளியாகின. அதில், “6 மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், டீசல் உள்ளிட்டவற்றுடன் அவர்கள் டெல்லி நோக்கி செல்ல தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக, தலைநகர் டெல்லியை விவசாயிகள் முற்றுகையிட முயற்சி செய்கின்றனர். நுழைவாயிலில் தடுக்க போலீஸ் முயலும் என்பதை முன்கூட்டியே அறிந்து, முக்கிய நுழைவாயில்களை தவிர்த்துவிட்டு தொலைவில் மற்றும் சாலை வசதிகள் முறையாக இல்லாத என்டரி பாயின்ட்களை பயன்படுத்தி டெல்லியை முற்றுகையிட விவசாயிகள் முடிவு செய்துள்ளது” என தகவல் சொல்லப்பட்டது.
கடந்த 2020-ம் ஆண்டு, விவசாயிகள் நடத்திய போராட்டம் 13 மாதங்களுக்கு மேல் நீடித்தது. அதுபோன்ற போராட்டத்தைக் கையிலெடுக்க திட்டமிட்டப்பட்டுதான் 6 மாதங்களுக்கு தேவையான பொருட்களுடன் டெல்லி சென்றுள்ளனர். இந்த நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்துவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்படுகிறது. அதையும் மீறி டெல்லியில் விவசாயிகள் குவிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பிப்ரவரி 14-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் விவசாய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சர்வன் சிங் பாந்தர், ” நாங்கள் அரசாங்கத்திடம் மோதுவதற்கு டெல்லிக்கு வரவில்லை. எங்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற கவனத்தை ஈர்க்கவே போராட்டம் நடத்துகிறோம். ஆனால், அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது போன்ற கருத்துகள் முன்வைக்கப்படுகிறது” என்றார்.
ஆளும் பாஜக அரசு, தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “இன்று விவசாயிகள் டெல்லியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டு தடுக்கப்படுகிறது. எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்கிய பாஜக அரசுக்கு அவர் குழு பரிந்துரைத்த குறைந்தபட்ச ஆதார விலையை அமல்படுத்த முடியவில்லை. விவசாயிகளுக்கு சட்டபூர்வ உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று எம்.எஸ்.சுவாமிநாதன் கூறி உள்ளதைப் பாஜக அரசு செய்யவில்லை” என விமர்சித்தார்.
இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில், “அடிப்படை உரிமைகளுக்காகப் போராடும் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசினால் நம் நாடு எப்படி முன்னேறும்? விவசாயிகளுக்கு ஆதரவளிக்க பாஜக அரசு தவறிவிட்டது. விவசாயிகள் மீதான கொடூர தாக்குதல்களைக் கண்டிக்கிறேன்” எனப் பேசினார்.
“தலைநகர் டெல்லியில் ஏன் போர்ச்சூழல் போன்ற பதற்றம் மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள்? மத்திய பாஜக அரசு, தன் சொந்த நாட்டில் வாழும் உழவர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை ஒடுக்க போர்க்களத்தைவிடக் கொடுமையான சூழலை உருவாக்கி இருக்கிறது” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதனிடையே, “பஞ்சாப் விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணி செல்கின்றனர். ஹரியானாவில் அவர்களுக்காக சிறைச்சாலை தயாராகி வருவதாகவும், அவர்களை தடுக்க தடுப்பு வேலிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் செய்தித்தாள்களின் மூலம் தெரிந்து கொண்டேன். அவர்கள் விவசாயிகள், கிரிமினல்கள் அல்ல.
இந்தியாவின் முன்னணி விஞ்ஞானிகளான உங்கள் அனைவரிடமும் நான் கேட்டுக் கொள்வது இதைத்தான். நாம் நம்முடைய ‘அன்னதாதா’க்களிடம் பேச வேண்டும். அவர்களை கிரிமினல்களைப் போல நடத்தக் கூடாது” என்று விவசாயிகளுக்கு ஆதரவாக மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மகள் மதுரா சுவாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.
இப்படியாக, கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், மத்திய வேளாண் துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா பேசுகையில், “விவசாயிகளுடன் சுமுகமான தீர்வு எட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கும் இந்தச் சூழலில், விவசாயிகள் போராட்டத்தை நடத்துவது ஆளும் பாஜக அரசுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago