மத்திய அரசில் ஆள்சேர்ப்பு முறை முற்றிலும் வெளிப்படை ஆனதாக மாறிவிட்டது: பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இன்று நடைபெற்ற வேலைவாய்ப்பு விழாவில் அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாகப் பணியில் சேர்ந்தவர்களுக்குப் பணி நியமனக் கடிதங்களை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசில் ஆள்சேர்ப்பு செயல்முறை முற்றிலும் வெளிப்படையானதாக மாறிவிட்டதாகக் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம், புதிதாக பணியில் சேர்ந்தவர்களுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான பணி நியமனக் கடிதங்களை வழங்கினார். புதுதில்லியில் ஒருங்கிணைந்த வளாகமான "கர்மயோகி பவன்" கட்டடத்தின் முதல் கட்ட கட்டுமானப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், "புதிதாகப் பணியமர்த்தப்பட்ட 1 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்குப் பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துகள். அரசில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான இயக்கம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வேலைவாய்ப்பு அறிவிப்பு மற்றும் நியமனக் கடிதங்களை வழங்குவதற்கு இடையில் நீண்ட கால விரயம், முறைகேடு அதிகரிப்பதற்கு வழிவகுத்தது.

தற்போதைய அரசு முழு செயல்முறையையும் வெளிப்படையானதாக ஆக்கியுள்ளது. அதே நேரத்தில் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆள்சேர்ப்பு செயல்முறையையும் நிறைவு செய்துள்ளது. இது ஒவ்வொரு இளைஞருக்கும் தங்கள் திறன்களை வெளிப்படுத்துவதில் சமமான வாய்ப்புகளுக்கு வழிவகுத்துள்ளது. இன்று, ஒவ்வொரு இளைஞரும் கடின உழைப்பு மற்றும் திறன்களால் தங்கள் வேலையை உறுதிப்படுத்த முடியும் என்று நம்புகிறார்கள். நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களைப் பங்கெடுப்பாளர்களாக மாற்ற அரசு பாடுபடுகிறது. கடந்த 10 ஆண்டுகளில், முந்தைய அரசுகளை விட தற்போதைய அரசு 1.5 மடங்கு அதிகமாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது.

புதுதில்லியில் ஒருங்கிணைந்த வளாகமான 'கர்மயோகி பவன்' முதல் கட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவது, திறன் வளர்ப்பை நோக்கிய அரசின் முன்முயற்சியை வலுப்படுத்தும். அரசின் முயற்சிகள் காரணமாக புதிய துறைகள் உருவாக்கப்படுகின்றன. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதோடு, சுயதொழில் வாய்ப்புகளையும் அரசு உருவாக்கி வருகிறது. பட்ஜெட்டில் 1 கோடி அளவுக்கு மேற்கூரை சூரிய மின் உற்பத்தி அமைப்புகளை நிறுவுவதற்கான திட்டம் லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

சுமார் 1.25 லட்சம் புத்தொழில் நிறுவனங்களைக் கொண்ட உலகின் மூன்றாவது பெரிய புத்தொழில் சூழல் அமைப்பாக இந்தியா உள்ளது. இந்த புத்தொழில் நிறுவனங்களில் பெரும்பாலானவை 2-ம் நிலை அல்லது 3-ம் நிலை நகரங்களைச் சேர்ந்தவை. இந்தப் புத்தொழில் நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருவதால், சமீபத்திய பட்ஜெட்டில் புத்தொழில் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக பட்ஜெட்டில் ஒரு லட்சம் கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணம் மேற்கொள்ளும்போது சாமானிய மக்களின் முதல் தேர்வாக ரயில்வே உள்ளது. இந்தியாவில் ரயில்வே துறை மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்து வருகிறது. அடுத்தப் பத்தாண்டுகளில் இத்துறை முழுமையான மாற்றத்தைக் காணும். 2014-ம் ஆண்டுக்குப் பிறகு, ரயில்வேயை நவீனமயமாக்குதல், மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, ஒட்டுமொத்த ரயில் பயண அனுபவத்தையும் புதுப்பித்துக் கொள்ளும் இயக்கம் தொடங்கப்பட்டது.

இந்த ஆண்டு பட்ஜெட் மூலம் வந்தே பாரத் எக்ஸ்பிரசில் இருப்பது போன்ற 40,000 நவீன ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு சாதாரண ரயில்களுடன் அவை இணைக்கப்படும். வளர்ச்சியை விரைவுபடுத்த உள்கட்டமைப்பில் முதலீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய பட்ஜெட்டில் உள்கட்டமைப்பில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 11 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய ரயில், சாலை, விமான நிலையங்கள் மற்றும் நீர்வழித் திட்டங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.

துணை ராணுவப் படைகளில் பெரும்பாலானவை புதிய நியமனங்களாக உள்ளன. துணை ராணுவப் படைகளுக்கான தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஜனவரி மாதம் முதல் இந்தி, ஆங்கிலம் தவிர 13 இந்திய மொழிகளில் துணை ராணுவப் படைகளுக்கான தேர்வு நடைபெறுகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்களுக்கு சமமான வாய்ப்பு கிடைக்கும்.

எல்லைப் பகுதி மற்றும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சியடைந்த பாரதம் திட்டத்தின் பயணத்தில் அரசு ஊழியர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. இன்று இணைந்துள்ள 1 லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள், இந்தப் பயணத்திற்கு புதிய சக்தியையும், வேகத்தையும் அளிப்பார்கள்.

ஒவ்வொரு தினத்தையும் தேச நிர்மாணத்துக்ககா அர்ப்பணிக்க வேண்டும் என்று புதிய ஊழியர்களை கேட்டுக் கொள்கிறேன். 800-க்கும் அதிகமான பாடத்திட்டங்களையும், 30 லட்சம் பயனாளர்களையும் கொண்டுள்ள வேலைவாய்ப்புக்கான கர்மயோகி எனும் இணைய தளத்தை அவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

இந்தியா

44 mins ago

இந்தியா

57 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

மேலும்