“பிரதமரின் தலையீடு இல்லாமல் நாங்கள் தாயகம் திரும்பியிருக்க முடியாது” - முன்னாள் கடற்படை வீரர்கள் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கத்தார் அரசுடன் இந்திய அரசு மேற்கொண்ட தூதரக பேச்சுவார்த்தை வெற்றி அடைந்ததையடுத்து அங்கு சிறையில் இருந்த இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். தாயகம் திரும்பிய அவர்கள், ”பிரதமரின் நேரடி தலையீடு இல்லையென்றால் எங்களால் இங்கு வந்திருக்க முடியாது” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இந்திய கடற்படையின் முன்னாள் வீரர்கள் 8 பேர், கத்தாரில் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் மத்திய அரசு நேரடியாக தலையிட்டது. கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் சார்பில் கத்தார் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வழக்கை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், தூக்கு தண்டனையை சிறை தண்டனையாகக் குறைத்தது. தொடர்ந்து அவர்களை இந்தியா அழைத்துவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், நேற்று (பிப்.12) 8 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பல மாதங்களுக்குப் பிறகு இன்று அதிகாலை இந்திய மண்ணில் வந்திறங்கிய அவர்கள், மிகுந்த உற்சாகத்துடன் ‘பாரத் மாதா கி ஜே’ கோஷமிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் கடற்படை வீரர் ஒருவர், “ஒருவழியாக தாயகம் திரும்பியதில் நான் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். பிரதமர் மோடியின் தனிப்பட்ட தலையீடு இல்லாமல் எங்களின் விடுதலை சாத்தியமாகியிருக்காது என்பதால் அவருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கத்தார் நாட்டின் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானிக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

மற்றொரு வீரர் பேசும்போது, “பிரதமர் மோடியின் தலையீடு இல்லாமல் நாங்கள் இன்று வெளியே வந்திருக்க முடியாது. அவர் எங்களை விடுவிக்க உயர்மட்டத்தில் அயராத முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என்றால் இன்று நாங்கள் உங்கள் முன் நின்றிருக்க மாட்டோம்” என்று கூறினார்.

முன்னதாக, துபாயில் நடைபெற்ற சுற்றுச்சூழல் தொடர்பான COP28 மாநாட்டில் பங்கேற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கத்தார் அரசர் ஷேக் தமிம் பின் ஹமாத்தைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்பு உறவை மேம்படுத்துவது குறித்த இந்த பேச்சுவார்த்தை மிகவும் நல்ல முறையில் நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது, கத்தாரில் வாழும் இந்தியர்களின் நலன்களை பாதுகாப்பது குறித்தும் பிரதமர் மோடி எடுத்துரைத்தது குறிப்பிடத்தக்கது.

விடுவிக்கப்பட்ட நபர்களின் விவரம்: கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கேப்டன் சவுரவ் வஷிஷ்ட், கேப்டன் அமித் நாக்பால், கமாண்டர் பூர்னேந்து திவாரி, கமாண்டர் சுகுனாகர் பாகலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா, மாலுமி ராகேஷ் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE