‘கூடு விட்டு கூட்டணி திரும்பும் அகாலி தளம்’

By செய்திப்பிரிவு

மத்தியிலும், பஞ்சாப்பிலும் கடந்த 1996-ம் ஆண்டு முதல் ஷிரோமணி அகாலிதளம் பாஜக தலைமையிலான தே.ஜ கூட்டணியில் இருந்து வந்தது. கடந்த 2021-ம் ஆண்டில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டுவந்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தே.ஜ. கூட்டணியிலிருந்து அகாலி தளம் வெளியேறியது.

கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டபேரவை தேர்தலில் அது பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது. ஆனால் 3 இடங்களில் மட்டுமே அகாலிதளம் வென்றது. இந்நிலையில் இண்டியா கூட்டணியை உருவாக்கிய பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், அதில் இருந்து வெளியேறி தே.ஜ. கூட்டணிக்கு மீண்டும் திரும்பினார். சரண் சிங்குக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டபின் ராஷ்ட்ரிய லோக் தளம் தே.ஜ. கூட்டணிக்கு மாறியது. தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் கூட்டணி தொடர்பாக பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

தே.ஜ. கூட்டணி வலுவடைந்து வருவதாலும், அதன் வெற்றி வாய்ப்பு அதிகம் என்ற கணிப்பாலும் ஷிரோமணி அகாலி தளம் மீண்டும் தே.ஜ. கூட்டணிக்கு வர விரும்புகிறது. இரு கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என நாளிதழ் ஒன்று ஏற்பாடு செய்த கருத்தரங்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிபடுத்தியுள்ளார். ஆனால் இந்தப் பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையவில்லை. தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE