பிரதமரின் ரகசிய திட்டத்தால் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது: புதிய தகவல்கள் வெளியாகின

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் ராஜதந்திர நகர்வு, ரகசிய திட்டத்தால் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. இதுதொடர்பான புதிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவில் திருத்தங்கள் செய்து குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் கடந்த 2019-ம் ஆண்டு ஆக.5-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதே நாளில் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்க வகை செய்யும் தீர்மானம்நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு அடுத்த நாளில் மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தின் பரிந்துரையை அன்றைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார். இதுதொடர்பான பிரகடனம் வெளியிடப்பட்டது.

இந்த சட்டப்பூர்வ நடவடிக்கைமூலம் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தும் ரத்து செய்யப்பட்டது. இதன் பின்னணி தகவல்கள் குறித்து டெல்லி வட்டாரங்கள் கூறியதாவது:

கடந்த 2019-ம் ஆண்டு ஆக.4-ம் தேதி மாலையில் பிரதமர் மோடி வழக்கமான பாதுகாப்பு இல்லாமல் தனியாக குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்றார். வழக்கமாக பிரதமர் செல்லும் வாகனத்தில் அவர் செல்லவில்லை. அன்றைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து நீண்டநேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது 370-வது சட்டப்பிரிவை நீக்க இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் ஆளும் பாஜக கூட்டணிக்கு மக்களவையில் மட்டுமே பெரும்பான்மை பலம் இருந்தது. மாநிலங்களவையில் பெரும்பான்மை பலம் கிடையாது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்க வகை செய்யும் அரசாணை வெளியிடப்பட்ட உடன், அதுதொடர்பான தீர்மானம் முதலில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் உள்ளது.

முதலில் மக்களவையில் தீர்மானத்தை நிறைவேற்றினால் எதிர்க்கட்சிகள் சுதாரித்து மாநிலங்களவையில் தீர்மானத்தை தடுத்து நிறுத்தக்கூடிய வாய்ப்பு இருந்தது. பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுரைப்படி எதிர்க்கட்சிகள் விழிப்படைவதற்குள் முதலில் மாநிலங்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதன்பிறகு மக்களவையில் எளிதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி பாஜகவின் தேர்தல் அறிக்கையில்அளித்த வாக்குறுதிபடி 370-வதுசட்டப்பிரிவு வெற்றிகரமாக நீக்கப்பட்டது. இதன்பிறகு காஷ்மீரில் தீவிரவாதம், வன்முறை செயல்கள் கணிசமாக குறைந்து உள்ளன.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்துவழங்கும் 370-வது சட்டப்பிரிவுகாரணமாக யாசின் மாலிக் போன்ற தீவிரவாத தலைவர்கள் பல ஆண்டுகள் காஷ்மீரில் சுதந்திரமாக உலா வந்தனர். இந்த சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு தீவிரவாத தலைவர்கள் முழுமையாக ஒடுக்கப்பட்டனர். காஷ்மீரில் படிப்படியாக அமைதி திரும்பி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் ராஜதந்திர நகர்வு, ரகசிய திட்டத்தால் இந்த வெற்றி சாத்தியமானது. இவ்வாறு டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE