''உரிமைகளைப் பெற டெல்லி நோக்கி செல்லும் விவசாயிகளுக்கு காங்கிரஸ் துணை நிற்கும்'' - மல்லிகார்ஜுன கார்கே

By செய்திப்பிரிவு

லுதியானா (பஞ்சாப்): ''மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படவில்லை, அவை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இது மோடியின் தந்திரம். இந்த சட்டங்கள் ரத்து செய்யப்படாவிட்டால் 2024-ல் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் அவை ரத்து செய்யப்படும்'' என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

குறைந்தபட்ச ஆதாரவிலை, ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200-க்கும் அதிகமான விவசாய அமைப்புகள் செவ்வாய்க்கிழமை டெல்லி சலோ என்ற போராட்டம் நடத்த இருப்பதாய் அறிவித்துள்ளது. இந்தநிலையில் பாஞ்சாபில் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "டெல்லியின் எல்லையில் விவசாயிகள் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அந்த மூன்று வேளாண் சட்டங்களும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை ரத்துசெய்யப்பட்டதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. இது மோடியின் தந்திரம். மோடி அரசு நமது நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் வேலைகளை அடித்துவிட்டது.

பஞ்சாப் விவசாயிகளை நான் பாராட்டுகிறேன். அவர்கள் மீண்டும் தங்களின் உரிமைக்காக டெல்லி சென்றுள்ளனர். அனைத்து காங்கிரஸாரும் அவர்களுக்கு துணை நிற்போம். விவசாயிகளின் நிலங்களை அவர்கள் (பாஜக) பெரிய நிறுவனங்களுக்கு வழங்கும் சட்டங்களை கொண்டு வந்துள்ளனர். நாம் அந்த மூன்று சட்டங்களை நீக்க போராடினோம். எதிர்காலத்திலும் போராடுவோம். அவர்கள் அந்த மூன்று வேளாண் சட்டங்களையும் நீக்கவில்லை என்றால், 2024ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் நாம் அந்தச் சட்டங்களை நீக்குவோம். விவசாயிகளை தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று அழைத்தனர்.

நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமேயான அக்னி வீரர்கள் திட்டத்தைக் கொண்டுவந்து வழக்கமான ராணுவ வேலையை பாஜக ரத்து செய்தது. ராணுவத்தில் 30 சதவீதம் காலி இடங்கள் உள்ளன. நீங்கள் அக்னி வீரர்கள் திட்டத்தில் சேர விரும்புகிறீர்களா அல்லது வழக்கமான பணிகளில் இணைய விரும்புகிறீர்களா? மோடி இன்று என்னவெல்லாம் செய்கிறாரோ அவை விவசாயிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் எதிராக இருக்கிறது.

தினமும் ராகுல் காந்தி அவமதிக்கப்படுகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அவர் பயணம் செய்தவர். தற்போது மணிப்பூரில் இருந்து மும்பை வரை பயணம் செய்பவர். அவரை எப்படி அவமதிக்க முடியும்? ஒவ்வொரு தேர்தலின் போதும் எல்லா இடங்களிலும் மோடியின் இடமே ஆக்கிரமித்துள்ளது. நீங்கள் காலையில் டிவியை திறந்தால் கடவுளை பார்க்க முடியாது, ஆனால் மோடியை பார்க்கலாம். நீங்கள் ஏழைகளுக்காக பாடுபட்டால் நாங்கள் அதை வரவேற்கிறோம். ஆனால் இந்த நாட்டில் ஏழைகள் மேலும் ஏழைகளாவே இருக்கிறார்கள்.

நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை மீதான விவாதத்தின் போது மோடி எங்கள் தலைவர் மன்மோகன் சிங்கை பாராட்டினார். மன்மோகன் சிங்கின் பணிகளை அனைவரும் பாராட்டுகின்றனர். அவரது ஆட்சிக் காலத்தில் நிறைய வளர்ச்சி பணிகள் நடந்துள்ளன. 80 கோடி மக்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்கப்படுகின்றன என்று மோடி சொல்கிறார். அதற்கான சட்டத்தை யார் கொண்டுவந்தது? உணவு பாதுகாப்பு சட்டத்தை சோனியா காந்தி கொண்டுவந்தார். அவர் (மோடி) அனைத்துக்குமான பெயரை எடுத்துக்கொள்ள விரும்புகிறார். 2004 - 2014 வரையிலான யுபிஏ அரசு ஆட்சி காலத்தில் 135 சதவீதம் எம்எஸ்பி அதிகரித்துள்ளது. 2014 - 2023 வரையிலான என்டிஏ ஆட்சியில் வெறும் 50 சதவீம் மட்டுமே வளர்ந்துள்ளது.

இது ஜனநாயக நாடு. இதில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். வெறும் மோடி, மோடி என்று முழங்குவது மட்டும் சோறு போட்டுவிடாது. கடந்த 1952-ம் ஆண்டு, மக்களுக்காக நாம் வேலை செய்ததால் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றோம் என்று பண்டிதர் ஜவஹர்லால் நேரு கூறினார். நாம் அவர்களுக்காக அவர்கள் மத்தியில் நிற்கவில்லை என்றால் நாம் மக்களின் நம்பிக்கையை பெற முடியாது. நான் காங்கிரஸ் தொண்டர்களுக்கு சொல்வது நாம் வெற்றி பெற வேண்டும் என்றால், நாம் மக்களுக்காக அவர்களுடன் நிற்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE