“இந்திய விழுமியங்களைக் கொண்ட கல்வி முறை தேவை” - பிரதமர் மோடி வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய விழுமியங்களைக் கொண்ட கல்வி, காலத்தின் கட்டாயத் தேவை என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

சுவாமி தயானந்த சரஸ்வதியின் 200-வது பிறந்த நாளையொட்டி குஜராத் மாநிலம் மோர்பியின் தங்காராவில் உள்ள சுவாமி தயானந்தர் பிறந்த இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் ஞாயிற்றுக்கிழமை உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "அந்த காலத்தில் இருந்த வழக்கங்களும், சமூகத் தீமைகளும் எவ்வாறு நம்மை பாதித்தன என்பதை நமக்குத் தெரிவித்தவர் தயானந்த சரஸ்வதி. நம்மிடம் இருந்த சமூக தீமைகள், நம்மை தாழ்ந்தவர்களாக சித்தரிப்பதற்கான ஒரு வழிமுறையாக பிரிட்டிஷ் அரசாங்கம் பயன்படுத்தியது. சிலர் சமூக மாற்றங்களைக் குறிப்பிட்டு பிரிட்டிஷ் ஆட்சியை நியாயப்படுத்தினர். சுவாமி தயானந்தரின் வருகை இந்தச் சதிகளுக்கு பலத்த அடி கொடுத்தது. சுவாமி தயானந்த சரஸ்வதி பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்று வாதிட்டார்.

லாலா லஜபதி ராய், ராம் பிரசாத் பிஸ்மில், சுவாமி சிரத்தானந்தா போன்ற புரட்சியாளர்கள் ஆரிய சமாஜத்தால் தாக்கம் பெற்று உருவானார்கள். தயானந்தர் ஒரு வேத ஞானி மட்டுமல்ல; ஒரு தேசிய முனிவரும் கூட. அமிர்த காலத்தின் ஆரம்ப ஆண்டுகளில் சுவாமி தயானந்தரின் 200-வது ஆண்டு விழா வந்துள்ளது. இந்தியாவைப் பற்றி சுவாமிஜி வைத்திருந்த நம்பிக்கையை, நாம் அமிர்த காலத்தின் மீதான தன்னம்பிக்கையாக மாற்ற வேண்டும். சுவாமி தயானந்தர் நவீனத்துவத்தின் ஆதரவாளராகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.

இந்திய விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறை காலத்தின் தேவை. சுவாமிஜியின் தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லும் வகையில் தேசிய கல்விக் கொள்கை உள்ளது. ஆரிய சமாஜ் பள்ளிகள் இதற்கான மையங்களாக உள்ளன. தேசிய கல்விக் கொள்கையின் மூலம் நாடு இப்போது அதை விரிவுபடுத்துகிறது. இந்த முயற்சிகளுடன் சமூகத்தை இணைப்பது நமது பொறுப்பு". இவ்வாறு பிரதமர் பேசினார். மேலும் சுவாமி தயானந்த சரஸ்வதி பிறந்த குஜராத்தில் தானும் பிறந்திருப்பதை பெருமையாக கருதுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE