“நான் எப்போதும் சமாஜ்வாதிதான்” - சிவபால் யாதவ் உறுதி

By செய்திப்பிரிவு

‘‘நான் எப்போதும் தீவிர சமாஜ்வாதியாகவும், அகிலேஷ் யாதவின் சித்தப்பாவாகவும் இருப்பேன்’’ என உத்தர பிரதேச சட்டப்பேரவையில் சிவபால் யாதவ் பேசினார்.

சமாஜ் வாதி கட்சியில் சிவபால் யாதவுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை, அவரை அகிலேஷ் யாதவ் மதிப்பதில்லை என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் சமீபத்தில் கூறினார்.

இதற்கு உத்தர பிரதேச சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரில் பதில் அளித்த சிவ பால் யாதவ் கூறியதாவது: முதல்வர் யோகி ஆதித்யநாத் சில சமயங்களில் என்னைப் பற்றி கவலைப் படுவது போல் தெரிகிறது. நான் எப்போதும் தீவிர சமாஜ் வாதியாகத் தான் இருப்பேன். நான் எப்போதும் பிற்படுத்தப் பட்டோர், தலித்துகள், சிறு பான்மையினருடன் தான் இருப்பேன். நான் அகிலேஷ் யாதவின் சித்தப்பாவாக எப்போதும் இருப்பேன். சட்டப் பேரவையில் நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட் ஏமாற்று வேலை.

பட்ஜெட் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். ராமர் கோயில் திறப்பு விழா நல்ல விஷயம்தான். ஆனால், உங்களின் இலக்கு ராம ராஜ்ஜியத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். உண்மையான ராம ராஜ்யத்தை ஏற்படுத்த இந்த அரசு தவறிவிட்டது. சமதர்மம் என்ற சமாஜ்வத்தான் ராம ராஜ்ஜியம். சமதர்மம் இல்லாமல் ராம ராஜ்ஜியம் வர முடியாது. இவ்வாறு சிவபால் யாதவ் கூறினார்.

அப்போது அவையில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் இல்லை. ஆனால் அவையில் இருந்த எதிர்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், சிவ பால் யாதவின் பேச்சை கேட்டு சிரித்த முகத்துடன் காணப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE