வரும் 13-ல் ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி: சுவாமி நாராயண் கோயிலை திறந்துவைக்கிறார்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக வரும் 13-ம் தேதி செல்லவுள்ளார். அப்போது அங்கு கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோயிலை பிரதமர் திறந்துவைக்கவுள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அபுதாபி சென்றிருந்தபோது, பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அபுதாபியில் சுவாமி நாராயண் கோயில் கட்டுவதற்கு 13.5 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்தார். மேலும், கூடுதலாக 13.5 ஏக்கர் நிலத்தை ஐக்கிய அரபுஅமீரக அரசு கடந்த 2019-ம் ஆண்டு வழங்கியது. இதையடுத்து 27 ஏக்கர் நிலத்தில் சுவாமி நாராயண் கோயில் கட்ட நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்தக் கோயில் இளஞ்சிவப்பு ராஜஸ்தான் மணற்கல் மற்றும் வெள்ளை இத்தாலி மார்பிள் கற்களால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

கோயிலில் மொத்தம் 7 கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. நிலநடுக்கம், மற்றும் அதீத வெப்பத்தினால் கோயில் பாதிக்கப்படாமல் இருக்க 100 சென்சார்கள் கோயிலுக்கு அடியில் பொருத்தப்பட்டிருக்கிறது. இக்கோயில் மொத்தமாக 400 மில்லியன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் செலவில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது.

போச்சசன்வாசி அக்சர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா(பாப்ஸ்) அமைப்பு சார்பில் இந்த சுவாமி நாராயண் கோயில் கட்டப்பட்டிருக்கிறது.

இந்தக் கோயிலை திறந்துவைப்பதற்காக பிரதமர் மோடி வரும் 13, 14-ம் தேதிகளில் ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். அபுதாபியில் அமைந்துள்ள முதல் இந்துக் கோயில் இது என்பது குறிப்பிடத்தக்கது.

2 நாள் பயணத்தின்போது அமீரக இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை, பிரதமர் மோடி சந்தித்துப் பேசவுள்ளார்.

மேலும் அமீரகத்தின் துணை அதிபர், பிரதமர், பாதுகாப்புத்துறை அமைச்சரையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசவுள்ளார் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE