முத்தலாக் தடை சட்டம், 370-வது பிரிவு நீக்கம் உள்ளிட்ட சாதனைகள்: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பெருமிதம்

By செய்திப்பிரிவு

டெல்லி: முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது, 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது என 17-வது மக்களவையின் சாதனைகளை பிரதமர் நரேந்திர மோடி பட்டியலிட்டு நேற்று உரையாற்றினார். இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதன்மூலம் 17-வது மக்களவை நிறைவடைந்தது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று அயோத்தி ராமர் கோயில் தொடர்பான தீர்மானம் மீது மக்களவையில் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அவர் கூறியதாவது:

இன்றைய தினம் 17-வது மக்களவையின் கடைசி நாள் ஆகும். இந்த நேரத்தில் அனைத்து எம்.பி.க்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இக்கட்டான நேரங்களில் அவையை சமநிலையுடன் வழிநடத்திய மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 17-வது மக்களவையின் செயல்திறன் 97 சதவீதத்தை எட்டியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் காலத்தில் மக்களவையின் செயல்திறனை 100 சதவீதமாக அதிகரிக்க செய்ய வேண்டும்.

நாடாளுமன்றத்தில் செங்கோல்: கடந்த 5 ஆண்டுகள் சீர்திருத்தம், செயலாக்கம், மாற்றம் என்ற அடிப்படையில் மக்களவை செயல்பட்டது. மிக நீண்ட காலமாக புதிய நாடாளுமன்றம் கட்டப்பட வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது. ஆனால் முந்தைய ஆட்சிகளில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.

பாஜக ஆட்சிக் காலத்தில் புதிய நாடாளுமன்றம் கம்பீரமாக கட்டப்பட்டு உள்ளது. நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அவையில் செங்கோல் நிறுவப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் இந்தியா சுதந்திரம் அடைந்த தருணத்தை எப்போதும் நினைவுகூர முடியும்.

நாடு முழுவதும் ஜி-20 கருத்தரங்குகள், மாநாடுகள் மற்றும் டெல்லியில் ஜி-20 உச்சி மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதன்மூலம் இந்தியாவின் வலிமை, அடையாளம் உலகுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

நாடு முழுவதும் 75-வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தில் வரலாற்று சாதனையாக 30 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. இதன்மூலம் காஷ்மீர் மக்களுக்கு சமூக நீதி வழங்கப்பட்டது.

மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் நாரி சக்தி வந்தன் சட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. முஸ்லிம் பெண்களுக்கு நீதி கிடைக்க வகை செய்யும் முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது.

வளர்ச்சி அடைந்த பாரதம்: கடந்த 1930-ம் ஆண்டில் தண்டி யாத்திரை நடத்தப்பட்டது. அப்போது விதைக்கப்பட்ட சுதந்திர வேட்கையின் காரணமாக 1947-ம் ஆண்டில் நாடு விடுதலை அடைந்தது. இதேபோல வரும் 2047-ம் ஆண்டுக்குள் பாரதத்தை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற இலக்கு நிர்ணயித்து உள்ளோம். இதற்கு அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானது. நமது லட்சியத்தை எட்ட அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்.

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க வகை செய்யும் பொதுத்தேர்வுகள் மசோதா, மற்றும் தகவல் பாதுகாப்பு மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு உள்ளது. நிலம், கடல், வான், சைபர் என எந்த வகையில் அச்சுறுத்தல் எழுந்தாலும் அதை எதிர்கொள்ள பாரதம் தயார் நிலையில் இருக்கிறது. விண்வெளித் துறையில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டு உள்ளன. பாரதம் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவால் தீவிரவாதம் ஆகும். தீவிரவாதத்தை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். எந்த வடிவில் தீவிரவாதம் வந்தாலும் சகித்துக் கொள்ள மாட்டோம்.

நாட்டின் பொருளாதாரத்தில் பல்வேறு சீர்த்திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. இதன்மூலம் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டிருக்கிறது. காலத்துக்கு ஒவ்வாத 60 சட்டங்கள் நீக்கப்பட்டு உள்ளன. திருநங்கைகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பேறுகால விடுப்பு 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

கரோனா போரில் வெற்றி: கரோனா பெருந்தொற்று காலத்தில் பலரை இழந்தோம். அந்த இக்கட்டான நேரத்திலும் நாடாளுமன்றம் கூடியது. முக்கிய அலுவல்கள் மேற்கொள்ளப்பட்டன. தொகுதி மேம்பாட்டு நிதியை அனைத்து எம்பிக்களும் விட்டுக் கொடுத்தனர்.

நாடு முழுவதும் மக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. நாட்டு மக்கள் அனைவரும் கரோனாவை வீழ்த்த மனஉறுதியுடன் செயல்பட்டனர்.

இதன்மூலம் கரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றோம். கரோனா பெருந்தொற்று காலத்திலும் புதிய நாடாளுமன்றத்தை வெற்றிகரமாக கட்டி முடித்தோம்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. இதன்காரணமாக சிலர் பதற்றத்தில் உள்ளனர். தேர்தல் என்பது இந்தியாவின் பெருமையை உலகறிய செய்யும் நடவடிக்கை. நமது ஜனநாயகம் ஒட்டுமொத்த உலகத்தையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டப்பட்டு உள்ளது. இதன்மூலம் நாட்டின்பெருமை நிலை நாட்டப்பட்டிருக்கிறது. பகவான் ராமர் 14 ஆண்டுகள் மட்டுமே வனவாசம் மேற்கொண்டார். ஆனால் அயோத்தி ராமர் கோயிலை கட்ட 500 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ராமர் கோயில் குறித்து சிலர் மட்டுமே துணிச்சலாக பேசுகின்றனர். சிலர் ஓடி ஒளிகின்றனர். எவ்வளவு மோசமான காலம் வந்தாலும் எதிர்கால தலைமுறைக்காக தொடர்ந்து உழைப்போம். 21-ம் நூற்றாண்டுக்கான ஆழமான அஸ்திவாரத்தை ஏற்படுத்துவோம்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

17-வது மக்களவை நிறைவு: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதன்மூலம் 17-வது மக்களவை நிறைவடைந்தது. மாநிலங்களவையும் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் மக்களவையில் 222 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE