மகாராஷ்டிர அமைச்சர் சாகன் பூஜ்பாலுக்கு கொலை மிரட்டல் - பின்னணி என்ன?

By செய்திப்பிரிவு

மும்பை: மகாராஷ்டிரா உணவுத் துறை அமைச்சர் சாகன் பூஜ்பாலுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சாகன் பூஜ்பால் தேசியவாத காங்கிரஸ் கட்சி அஜித் பவார் பிரிவில் இருக்கிறார். மராத்தா இடஒதுக்கீட்டு விவகாரத்தில் அவர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில், இக்கடிதம் குறித்து அவர், “எனக்கு எத்தனை மிரட்டல் வந்தாலும் நான் என் நம்பிக்கையில் இருந்து பின்வாங்கமாட்டேன்” என்றார். இருப்பினும் சாகன் பூஜ்பால் வசிக்கும் நாசிக் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கட்சி அலுவலகத்துக்கு வந்த கடிதம்: முன்னதாக நேற்று (பிப்.9) மாலை நாசிக்கில் உள்ள பூஜ்பால் அலுவலகத்துக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. அக்கடிதத்தில், “அமைச்சரைத் தாக்க 5 பேருக்கு ரூ.50 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் விழிப்புடன் இருப்பது நல்லது” எனக் குறிப்பிடப்பட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இது முதன்முறை அல்ல: ஓபிசி தலைவரான சக்கன் பூஜ்பாலுக்கு இதுபோன்று மிரட்டல் வருவது முதல் முறை அல்ல. நாசிக்கின் இயோலா சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ.வான சாகன் பூஜ்பாலுக்கு ஏற்கெனவே மின்னஞ்சல், குறுந்தகவல், தொலைபேசி அழைப்புகள் மூலம் மிரட்டல்கள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. “மிரட்டல் குறித்து அச்சம் ஏதுமில்லை. போலீஸாரிடம் தெரிவித்துவிட்டோம். அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள். எனது கட்சி கொண்ட கொள்கையின்படி நான் நடக்கிறேன். இதுபோன்ற மிரட்டல்கள் என்னை ஏதும் செய்யாது” என்றார்.

மராத்தா இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு: மராத்தா சமூகத்தினரை சமூக, கல்வி ரீதியாக பின் தங்கிய வகுப்பினராக (Socially and Educationally Backward - SEBC) அறிவித்து அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இட ஒதுக்கீடு தரக்கோரி சமூக நல செயற்பாட்டாளர் மனோஜ் ஜராங்கே பாட்டீல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். இதனையடுத்து மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கைகளை ஏக்நாத் ஷிண்டே அரசு ஏற்றுக்கொண்டது.

ஆனால் இதற்கு அரசின் கூட்டணிக்குள் இருந்தே எதிர்ப்பு கிளம்பியது. மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா - பாஜக அரசின் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த (அஜித் பவார் அணி) அமைச்சரும், ஓபிசி தலைவருமான சாகன் புஜ்பால், "இந்த முடிவை சட்டப்பூர்வமாக ஆய்வுக்குட்படுத்தும் போது அது தோற்றுப்போகும். இது வெறும் கண்துடைப்பு தான்.

மராத்தாக்கள் தவறாக வழி நடத்தப்படுகிறார்கள், ஓபிசிகளுக்கும் அநீதி இழைக்கப்படுகிறது. இது ஒரு வரைவு ஆவணம் மட்டுமே. பிப்.16-ம் தேதி வரை கருத்துக்களும் எதிர்வினைகளும் கேட்கப்படும், அதன் பின்னர் அரசு அதன் மீது முடிவெடுக்கும். அதனைத் தொடர்ந்து, அரசின் முடிவினை எதிர்த்து நீதிமன்றத்தை நாடுவதா இல்லையா என்று நாங்கள் முடிவெடுப்போம்" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE