“சட்டப்பிரிவு 370 ரத்துக்காக மக்கள் ஆசியுடன் பாஜகவுக்கு 370 ‘சீட்’ கிட்டும்” - அமித் ஷா

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: "வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக 370 இடங்களும், தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களும் பெற்று நரேந்திர மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும்" என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (சனிக்கிழமை) தெரிவித்தார். மேலும், “இந்த மக்களவைத் தேர்தல் முடிவுகளில் எந்த ரகசியமும் இல்லை. காங்கிரஸும் பிற எதிர்க்கட்சிகளும் மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் தான் உட்காரப் போகிறது என்பதை உணர வேண்டும்” என்று அவர் கூறினார்.

இடி நவ் சர்வதேச வணிக மாநாடு 2024-ல் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "நாங்கள் சட்டப்பிரிவு 370-ஐ (ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சட்டப்பிரிவு) ரத்து செய்துள்ளோம். அதனால், மக்களவைத் தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு 370 இடங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 400 இடங்களிலும் வெற்றியை கொடுத்து ஆசீர்வதிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.

ஜெயந்த் சவுதரியின் ஆர்எல்டி, சிரோமணி அகாலி தளம், இன்னும் சில பிராந்திய கட்சிகள் பாஜகவில் இணைவது குறித்து அவரிடம் கேட்டபோது, "பாஜக குடும்பக் கட்டுப்பாட்டை நம்புகிறது. ஆனால், அரசியலில் இல்லை. பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது ஆனால், எதுவும் முடிவாகவில்லை. 2024 மக்களவைத் தேர்தல் என்டிஏ மற்றும் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணிக்கு இடையிலான போட்டியாக இருக்காது. வளர்ச்சி மற்றும் வெற்று கோஷங்களுக்கு இடையிலான தேர்தலாக இருக்கும்" என்றார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை குறித்து கேட்டபோது, "கடந்த 1947-ம் ஆண்டு நாட்டை பிரிப்பதற்கு நேரு காரணமாக இருந்ததால், அவர்களின் குடும்பத்துக்கு இதுபோன்ற பேரணிகளை நடத்துவதற்கு உரிமை இல்லை" என்றார்.

மத்திய அரசு தற்போது ஏன் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்ற கேள்விக்கு பதில் அளித்த அமித் ஷா, “கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை இழந்தபோது காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ என்ன குழப்பத்தை ஏற்படுத்திருந்தது என்று அறிந்துகொள்ளும் முழு உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு. அந்த நேரத்தில் (2014) பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தது. எல்லா நிலையிலும் மோசடிகள் நிறைந்திருந்தன. வெளிநாட்டு நிதி வரவில்லை. அந்த நேரத்தில் நாங்கள் வெள்ளை அறிக்கை வெளியிட்டிருந்தால் அது தவறான செய்தியை வெளிப்படுத்தி இருக்கும்.

10 ஆண்டுகளுக்குப் பிறகு எங்களின் அரசு பொருளாதாரத்தை மீட்டெடுத்துள்ளது. வெளிநாட்டு முதலீடுகள் கொண்டு வந்துள்ளோம். இப்போது ஊழல் எதுவும் இல்லை. அதனால் வெள்ளை அறிக்கை வெளியிட இதுவே சரியான நேரம்” என்றார்.

அயோத்தி ராமர் கோயில் குறித்து அவர் கூறும்போது, “ராமர் பிறந்த இடத்தில் கோயில் கட்டப்பட வேண்டும் என்று 500 - 550 ஆண்டுகள் நாட்டு மக்கள் நம்பி வந்தனர். ஆனால், சமாதான அரசியல், சட்டம் - ஒழுங்கை காரணம் காட்டி ராமர் கோயில் கட்ட அனுமதிக்கப்படவில்லை" என்றார்.

பொது சிவில் சட்டம் குறித்து கூறும்போது, “பொது சிவில் சட்டம் என்பது நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் கையெழுத்திடப்பட்ட அரசியல் சாசனக் கொள்கையாகும். ஆனால், காங்கிரஸ் கட்சி சமாதான அரசியல் காரணமாக அதனை நிராகரித்து வந்தது. உத்தராகண்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பது ஒரு சமூக மாற்றம். அது அனைத்து தளங்களிலும் விவாதிக்கப்படும். சட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்படும். ஒரு மதசார்பற்ற நாட்டில் மத அடிப்படையிலான சட்டம் இருக்க முடியாது” என்றார் அமித் ஷா.

தேர்தலுக்கு முன்பே சிஏஏ - “குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது நமது நாட்டின் ஒரு சட்டம். தேர்தலுக்கு முன் இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். இதில் எந்தக் குழப்பமும் இல்லை. குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பது காங்கிரஸ் அரசின் வாக்குறுதி. நாடு பிளவுபட்டபோது, அந்த நாடுகளில் சிறுபான்மையினர் துன்புறுத்தலுக்கு உள்ளானதை அடுத்து, அவர்களை இந்தியா வரவேற்பதாகவும், அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் உறுதி அளித்தது. ஆனால், தற்போது அந்த வாக்குறுதியில் இருந்து அந்தக் கட்சி பின்வாங்குகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது புதிதாக குடியுரிமை வழங்குவதற்கான சட்டம்தானே தவிர, யாருடைய குடியுரிமையையும் பறிக்கும் சட்டம் அல்ல. ஆனால், நமது நாட்டில் உள்ள சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் தூண்டப்படுகிறார்கள். யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்கான அம்சம் எதுவும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் இல்லை. வங்கதேசத்திலும், பாகிஸ்தானிலும் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கான வழிவகைகள் மட்டுமே குடியுரிமை திருத்தச் சட்டத்தில் உள்ளன” என்று அமித் ஷா கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE