முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், நரசிம்ம ராவ், விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘பாரத ரத்னா’ விருது அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: முன்னாள் பிரதமர்கள் சவுத்ரி சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ், தமிழகத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு ‘பாரத ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கலை, இலக்கியம், அறிவியல், பொது சேவை உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நாட்டின் மிக உயரிய பாரத ரத்னாவிருது வழங்கப்படுகிறது. மறைந்த பிஹார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்குருக்கு கடந்த ஜனவரி 23-ம் தேதியும், முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானிக்கு கடந்த3-ம் தேதியும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மறைந்த முன்னாள் பிரதமர்கள் சவுத்ரி சரண் சிங், பி.வி.நரசிம்மராவ், தமிழகத்தை சேர்ந்த மறைந்த வேளாண்விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை குடியரசுதலைவர் மாளிகை நேற்று வெளியிட்டது.

பிரதமர் மோடி புகழாரம்: விருது பெறும் தலைவர்களுக்கு புகழாரம்சூட்டி, பிரதமர் நரேந்திர மோடி, சமூக வலைதளத்தில் நேற்று தெரிவித்துள்ளதாவது:

எங்களது அரசு சார்பில் முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்குக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். தனது வாழ்நாள் முழுவதையும் விவசாயிகளின் நலனுக்காக அர்ப்பணித்தவர் சரண் சிங். உத்தர பிரதேச முதல்வர், மத்திய உள்துறை அமைச்சராக நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றினார். அவசரநிலைக்கு எதிராக தீரமாக போரிட்டார்.

முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் சிறந்த அறிஞர், சிறந்த அரசியல் தலைவர், பன்முகத்தன்மை கொண்டவர். ஆந்திர முதல்வராக, மத்திய அமைச்சராக அவர் ஆற்றிய பணிகள்எப்போதும் நினைவுகூரப்படும். தொலைநோக்கு பார்வையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

விவசாயம், விவசாயிகள் மற்றும் நாட்டின் நலனுக்காக டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் மகத்தான பங்களிப்புகளை வழங்கியுள்ளார். சவாலான காலங்களில் விவசாயத்தில் இந்தியா தன்னிறைவை எட்ட முக்கிய பங்கு வகித்தார். இந்திய விவசாயத்தை நவீனமயமாக்குவதில் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டார். ஒரு கண்டுபிடிப்பாளராக, வழிகாட்டியாக, கற்றல் மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிப்பவராக அவர் ஆற்றிய பணி மகத்தானது. அவரது தொலைநோக்கு பார்வை இந்திய விவசாயத்தை மாற்றி அமைத்ததுடன், நாட்டின் உணவு பாதுகாப்பு,செழிப்பை உறுதி செய்தது. அவர் எனக்குமிகவும் நெருக்கமானவர். அவரது நுண்ணறிவை எப்போதும் மதிக்கிறேன். இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.

பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதற்காக, தலைவர்களின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

சரண் சிங்கின் பேரனும், ராஷ்டிரிய லோக் தளம் கட்சி தலைவருமான ஜெயந்த் சவுத்ரி: எனது தாத்தா சரண் சிங்குக்கு பாரதரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக குடியரசுத் தலைவர், பிரதமருக்கு நன்றி. முந்தைய அரசுகள் முடிவெடுக்க தயங்கிய நிலையில் பிரதமர் துணிச்சலாக முடிவு எடுத்துள்ளார்.

நரசிம்ம ராவ் பேரனும், பாஜக மூத்த தலைவருமான என்.வி சுபாஷ்: எனது தாத்தா நரசிம்ம ராவ், காங்கிரஸின் மூத்த தலைவராக இருந்தார். 2004-2014 காலகட்டத்தில் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தும், அவருக்கு விருது வழங்கவில்லை. சோனியா காந்தி குடும்பத்தினர் பல்வேறு வகைகளில் அவர் மீது பழிசுமத்தினர்.

எம்.எஸ்.சுவாமிநாதனின் மகளும், உலகசுகாதார அமைப்பின் முன்னாள் தலைமைவிஞ்ஞானியுமான டாக்டர் சவுமியா சுவாமிநாதன்: எனது தந்தை சுவாமிநாதன் மதிப்பு,மரியாதையை எதிர்பார்த்து பணியாற்றவில்லை. விவசாயம், விவசாயிகளின் நலனுக்காக பாடுபட்டார். உயிரோடு இருக்கும்போதே விருது அறிவித்திருந்தால், மகிழ்ந்திருப்பார். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

மத்திய அரசின் முடிவை வரவேற்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோரும் வரவேற்றுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE