நாட்டைக் கடந்த காலத்துக்குள் புதைக்கிறது மத்திய அரசு: சு.வெங்கடேசன் எம்.பி @ மக்களவை

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் தாக்கலான வெள்ளை அறிக்கை மீதான விவாதத்தில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கலந்து கொண்டார். அப்போது அவர், நிகழ்காலத்துக்கு அஞ்சி நாட்டைக் கடந்த காலத்துக்குள் புதைக்கப்படுவதாக மத்திய அரசு மீது குற்றம் சுமத்தினார்.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.யான சு.வெங்கடேசன் இன்று மக்களவையில் பேசியதாவது: சில உயிர்கள் ஒளிக்கு அஞ்சி இருளிலே வாழும், சில மனிதர்கள் நிகழ்காலத்துக்கு அஞ்சி கடந்த காலத்திலே வாழ்வார்கள். அதேபோலத்தான் சில கட்சிகளும்... தேர்தல் வந்துவிட்டால் நாங்கள் எல்லாம் வளர்ச்சியைப் பற்றி, வேலையின்மை பற்றி, வறுமையைப் பற்றி பேசுவோம். அவர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த படையெடுப்பைப் பற்றிப் பேசுவார்கள்.

600 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆக்கிரமிப்பைப் பற்றிப் பேசுவார்கள். நாங்கள் பணவீக்கத்தைப் பற்றிப் பேசினால், அவர்கள் பாபரைப் பற்றிப் பேசுவார்கள், நாங்கள் கார்ப்பரேட்டுகளைப் பற்றிப் பேசினால், அவர்கள் கஜினி முகமதைப் பற்றிப் பேசுவார்கள். கடந்த காலத்தைக் கழித்து விட்டால், அவர்களிடம் எதிர்காலத்தைச் சந்திக்கிற எந்த ஒரு கருவியும் இல்லை.

2024 இந்தியாவின் வளர்ச்சி, உலக வளர்ச்சியைப் பற்றிப் பேசச் சொன்னால், இந்த தேர்தல் யுத்தத்தை துவங்கும்போது பத்து ஆண்டுகள் பின்னால் போய் நின்று கொண்டிருப்பது இந்த அரசினுடைய தோல்வியின் இன்னொரு அடையாளம். இந்த வெள்ளை அறிக்கை என்ன சொல்கிறது? பில்லியனர்களுடைய வளர்ச்சியைப் பற்றி இங்கே நான் சொல்ல வேண்டும், 2014-வது ஆண்டில் இந்தியாவில் 70 பில்லியனர்கள் இருந்தார்கள். இன்றைக்கு 170 பில்லியனர்கள் இருக்கிறார்கள்.

தனிநபர் சராசரி வருமானம் உலகத்தில் 142-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. மனிதவள குறியீட்டில் 132-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. மகிழ்ச்சிக் குறியீட்டில் 136-வது இடத்தில் இந்தியா இருக்கிறது.

கார்ப்பரேட்டுகள் மகிழ்ச்சியில் திளைக்கிற ஒரு நாட்டில் மக்களின் மகிழ்ச்சி கடலினுள் தான் மூச்சு மூழ்க உள்ளே கிடக்கும். எனவேதான் இந்தியா உலகின் மகிழ்ச்சிக் குறியீட்டில் 136-வது இடத்தில் இருக்கிறது. சர்வதேச உணவுக் கொள்கைக் கழகத்தினுடைய பட்டினிக் குறியீட்டில் 122 நாடுகளில் இந்தியா 107-வது இடத்தில் இருக்கிறது. இந்தப் புள்ளிவிவரத்தை எல்லாம் எதிர்க்கட்சிகள் சொன்னால் இந்தப் புள்ளிவிவரத்தை நாங்கள் ஏற்கவில்லை என்று அமைச்சர் சொல்கிறார். நீங்களே பரீட்சை எழுதிக் கொள்வீர்கள், நீங்களே மதிப்பிட்டுக் கொள்வீர்கள், நீங்களே அதற்கு மதிப்பெண் இட்டுக் கொள்வீர்கள்.

கேட்டால் மதிப்பெண் விஷயத்தில் தவறு இழைத்தால் பத்தாண்டு கால சிறைத்தண்டனை என்று புதிய சட்டத்தைக் கொண்டு வருகிறீர்கள். பணவீக்கத்தைப் பற்றி இங்கே பேசி உள்ளீர்கள். நிறைய வரைபடங்கள் வெள்ளை அறிக்கையிலே இருக்கிறது.

ஆனால், ஒரே ஒரு வரைபடத்தை நீங்கள் ஏன் தவறவிட்டீர்கள்? சமையல் கியாஸ் விலை உயர்வு வரைபடத்தை நீங்கள் வெளியிடத் தயாரா? 10 ஆண்டுகளில் பெட்ரோல் மீதான வரிகள் 3.5 மடங்கு உயர்ந்திருக்கிறது, டீசல் மீதான வரி 9.5 மடங்கு உயர்ந்திருக்கிறது.

இதற்கு யார் காரணம்? யமுனையின் கரையிலே சாந்தி வனத்திலே உறங்கிக் கொண்டிருக்கிற ஜவஹர்லால் நேரு தான் இதற்கும் காரணமா? நீங்கள் யோசித்துப் பாருங்கள், கார்ப்பரேட்டுகளின் வரி 2016 ஆவது ஆண்டு 33 சதவீதம் இருந்தது.

உங்கள் ஆட்சியில் கார்ப்பரேட்டுகளின் வரி 22% மட்டுமே. 11% கார்ப்பரேட்டுகளுக்கு குறைத்து இருக்கிறீர்கள். 1% கார்ப்பரேட் வரி 50,000 கோடி எனில் 11% என்றால் எத்தனை ஆயிரம் கோடி என்று நிதி அமைச்சர் இந்த அவையிலே கணக்கு முன்வைப்பாரா? இவற்றின் உச்சம் என்ன தெரியுமா? அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு நாங்கள் அடித்தளம் இடுகிறோம் என்று மாண்புமிகு பிரதமர் சொல்கிறார். ஆனால் கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத ஒன்றை நீங்கள் செய்திருக்கிறீர்கள். இந்தியாவில் இறைவனை வழிபடுகிற ஒவ்வொரு இந்தியனும் சூடம் பொருத்தி வழிபடுவது இந்திய மரபுகளிலே ஒன்று. ஆனால் நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? இறைவனை வழிபடுவதற்கு பயன்படுத்துகிற சூடத்திற்கு 12% ஜிஎஸ்டியை போட்ட வரலாற்றின் முதல் நபராக நீங்கள் இருக்கிறீர்கள்.

யோசித்துப் பாருங்கள் இறைவனை வழிபடுகிற, சூடத்தை ஏற்றுகிற ஒவ்வொரு இந்தியனும் இந்த அநீதியான வரி விதிப்புக்கு எதிராக, இந்த அநீதியான அரசுக்கு எதிராக ஆண்டவனை பிரார்த்திப்பான் என்பதுதான் உண்மை.

இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தை நான் நினைவுபடுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். தன்னை நாத்திகன் என்று அறிவித்துக் கொண்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், சூடம் பக்திப் பொருள் எனவே தமிழ்நாட்டில் அதற்கு வரி விலக்கு அளிக்கிறேன் என்று சொல்லி வரி விலக்கு அளித்தார்.

ஆத்திகரோ நாத்திகரோ என்பதல்ல அடுத்த மனிதன் மீதான நம்பிக்கைக்கு எவ்வளவு மதிப்பு கொடுக்கிறோம் என்பதுதான் ஒரு அரசினுடைய இலக்கணமாக இருக்கிறது. 1975 ஆவது ஆண்டில் துவங்கி 2013 வரை ஒன்றிய அரசு அமல்படுத்திக் கொண்டிருந்த 15 திட்டங்களின் பெயர்களை நீங்கள் இந்தியில் மாற்றினீர்கள்.

இந்தப் பத்தாண்டுகளில் நீங்கள் கொண்டு வந்த அனைத்து திட்டத்துக்கும் இந்தியில் மட்டுமே பெயர் வைத்தீர்கள். திட்டங்கள் மட்டுமல்ல, சட்டங்களுக்கும் இந்தியில் பெயர் (ஐபிசி உள்ளிட்டு) வைத்திருக்கிறீர்கள். இவற்றின் உச்சபச்சம் என்ன தெரியுமா?

பண மதிப்பிழப்பின் பொழுது நீங்கள் புதிதாக கொண்டு வந்த 500 ரூபாய் நோட்டுகள், 2000 ரூபாய் நோட்டுகளில் வரலாற்றில் இதுவரை இல்லாதபடி முதல் முறையாக தேவநாகரி எண்களை நீங்கள் பொருத்தி இருக்கிறீர்கள்.

அதேபோல வேலைவாய்ப்புப் பற்றிப் பேசியிருக்கிறீர்கள். 15 வயது முதல் 24 வயது வரை இருக்கிற இளைஞர்களில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் எத்தனை சதவிகிதம் இருக்கிறார்கள் என்று பார்த்தால் பாகிஸ்தானில் 11 சதவிகிதம் தான், பங்களாதேஷில் 12 சதவிகிதம் தான்.

ஸ்டார் அப் தோல்வி: ஆனால், இந்தியாவில் 24 சதவிகிதம் இருக்கிறார்கள். இது உண்மையா? இல்லையா? என்பதை நிதி அமைச்சர் அவர்கள் இந்த அவையிலே சொல்ல வேண்டும். நீங்கள் துவங்கிய ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் 95 சதவிகிதம் தோல்வியில் முடிந்து விட்டதாக நிதி ஆயோக் உறுப்பினர் பேட்டி அளித்திருக்கிறார்.

பிஎஸ்என்எல் 4ஜி: இது உண்மையா? இல்லையா? என்பதை நிதி அமைச்சர் அவர்கள் இந்த அவையிலே சொல்ல வேண்டும். அதேபோல முன்னோர்கள் சேர்த்து வைத்தச் சொத்தை எல்லாம் ஊதாரிப் பிள்ளை தொலைப்பதைப் போல, பிஎஸ்என்எல் 4ஜி டெலிகாம் சேவையை தராமல் சாகடித்தது யார்?

ஏர் இந்தியா: ஏர் இந்தியாவை தனியாருக்குத் தூக்கிக் கொடுத்தது யார்? எல்ஐசி வங்கி உள்ளிட்ட அனைத்துப் பொதுத்துறை நிறுவங்களையும் தனியாருக்குத் தூக்கிக் கொடுக்கச் சட்டத்தைக் கொண்டு வந்தது யார்? என்பதை நாங்கள் கேட்க விரும்புகிறோம்.

வெள்ளை அறிக்கையில் மவுனம்: மனித உரிமையைப் பற்றி, மாநில உரிமையைப் பற்றி, மாநிலங்களுக்கானப் பங்கீடு பற்றி இந்த வெள்ளை அறிக்கை மிக மௌனம் காப்பது ஏன்? எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைக் கசக்கிப் பிழைக்கிற ஒரு கொள்கையை நீங்கள் தொடர்ந்து அமல்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.

பிரிவினை உருவாக்கம்: கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு என்று பேசினால் பிரதமரே சொல்கிறார், வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலே பிரிவினையை உருவாக்குகிறீர்கள் என்று. நாங்கள் பிரிவினையை உருவாக்கவில்லை.

வஞ்சிக்கப்பட்ட தமிழகம்: நீங்கள் கைவிட்ட நிறுவனங்களைக் கேரள அரசு மீண்டும் எடுத்து நடத்துகிறது. இது ஒன்றிய அரசுக்கு அவமானமாகத் தெரியவில்லையா? அதிக வருமானத்தை ஈட்டிக் கொடுக்கிற மாநிலம் தமிழ்நாடு. ஆனால் இந்தப் பத்து ஆண்டுகளில் நீங்கள் தமிழகத்தை வஞ்சித்த விதம் ஒன்றா? இரண்டா? மதுரை எய்ம்ஸ் இன்றைக்கு வரை மதுரை எய்ம்ஸ்-ன் நிலை என்ன? இன்றைக்கு காலையில் எனது அருமை நண்பர் மாணிக்கம் தாகூர் அவர்கள் கேட்டக் கேள்விக்கு அமைச்சர் அவர்கள் இன்று காலையில் சொன்ன பதில் என்ன? நிலம் கையகப்படுத்துவதிலே தாமதம், கோவிட் காரணமா? ஜெய்காவினுடய ஒப்பந்தத்தில் தாமதம், கோவிட் காரணம் என்று வரிசையாக அடுக்குகிறீர்கள். இந்தக் காரணங்கள் எல்லாம் இமாச்சலப் பிரதேசத்தின் எய்ம்ஸ்க்கு ஏன் பொருந்தவில்லை? இந்த காரணங்கள் எல்லாம் நீங்கள் ஆட்சி நடத்துகிற மாநிலத்தில் உருவாக்கப்பட்ட எய்ம்ஸ்க்கு ஏன் பொருந்தவில்லை?

மதுரை நைபர்: உங்களது நோக்கம் எய்ம்ஸ்க்கு நிதி தராமல் இழுத்தடிப்பது மட்டுமல்ல, தமிழ்நாட்டை வஞ்சிக்க வேண்டும் என்ற ஒற்றைப் புள்ளிதான். மதுரை நைபர் இன்றைக்கு வரை கிடப்பிலே இருக்கிறது. வரிசையாக எங்களால் அடுக்கிக் கொண்டே போக முடியும்.

வஞ்சக அரசியல்: இரண்டு பெரும் வெள்ளத்தால் மூழ்கிக் கிடந்த தமிழ்நாட்டுக்கு ஒரு பைசா நிதியைக் கூட இப்பொழுது வரை கொடுக்க மாட்டேன் என்று விடாப்பிடியாக இருக்கிறீர்கள். வெள்ளம் வடிந்துவிட்டது, ஆனால் உங்களுடைய வஞ்சக அரசியல் வடியவில்லை. தமிழக மக்கள் ஒருபோதும் அதை மன்னிக்கப் போவதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

இந்தியா

39 mins ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்