புதுடெல்லி: ‘பொருளாதாரம் குறித்த மோடி அரசின் வெள்ளை அறிக்கை, ஒரு வெள்ளை பொய் அறிக்கை’ என்று சாடியிருக்கும் காங்கிரஸ் கட்சி, ‘வேலையில்லாத் திண்டாட்டம், பணமதிப்பிழத்தல், எல்லைப் பதற்றம், மணிப்பூர் பிரச்சினை போன்றவை குறித்தும் இதுபோன்ற ஆவணத்தை வெளியிட வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளது.
இது குறித்த நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த காங்கிஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "அது வெள்ளை அறிக்கை இல்லை, வெள்ளை பொய் அறிக்கை. எங்கள் காங்கிரஸ் தலைவர் (மல்லிகார்ஜுன கார்கே) நேற்று கருப்பு அறிக்கையை வெளியிட்டார். இந்த வெள்ளை அறிக்கைக்கான பதில் அந்தக் கருப்பு அறிக்கையில் உள்ளது. கருப்பு அறிக்கை, அரசின் வெள்ளை அறிக்கைக்கான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்.
அரசின் வெள்ளை அறிக்கையில், பணமதிப்பிழப்பு, வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், அதிகரித்து வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வு போன்றவை பற்றிக் குறிப்பிடப்படவில்லை. சீனாவுடனான எல்லைப் பிரச்சினை, எல்லைப் பதற்றம் போன்ற விவாகாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இவை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட நாங்கள் கோரி வருகிறோம். அவர்கள் அமைதி காக்கிறார்கள்.
அதேபோல் மணிப்பூர் விவகாரம் குறித்தும் நாங்கள் வெள்ளை அறிக்கை வெளியிட நாங்கள் வலியுறுத்தி வருகிறோம் அவர்கள் மவுனமாக இருக்கிறார்கள். முன்பு நாங்கள் பணமதிப்பிழப்பு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட கோரினோம். அப்போதும் மவுனம் காத்தார்கள். நாட்டில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இருக்கும் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை. இந்த வெள்ளை அறிக்கையும் மற்றொரு நிகழ்வே (event). எல்.கே.அத்வானி சொன்னது போல அவர் (மோடி) ஒரு நிகழ்வு ஒருங்கிணைப்பாளரே (event manager).
» “எனக்கு அனுப்பிய சம்மன்களின் எண்ணிக்கைக்கு நிகராக டெல்லியில் பள்ளிகளைத் திறப்பேன்” - கேஜ்ரிவால்
» சரண் சிங்குக்கு பாரத ரத்னா | பாஜக கூட்டணியை ‘உறுதி’ செய்த ஆர்எல்டி தலைவர் ஜெயந்த் சவுத்ரி!
ஊழல் மற்றும் விவசாயிகள், பெண்கள், இளைஞர்களுக்கு எதிரான அநீதிகளில் அரசு மவுனம் காக்கிறது, பொதுத்துறை நிறுவனங்கள் அவரது ஒன்று அல்லது இரண்டு நண்பர்களுக்கு விற்கப்படுகின்றன. அவர் துறைமுகங்கள், விமான நிலையங்கள், ரயில்வே, தொழில்சாலைகள், எண்ணைய் சுத்திகரிப்பு நிலையங்களை தனியாருக்கு விற்றுவிட்டார்” என்று ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டினார்.
இதனிடையே, யுபிஏ தலைமையிலான அரசின் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கை மோடி அரசின் கருப்பு உண்மையை மறைப்பதையே நோக்கமாக கொண்டுள்ளது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வெள்ளை அறிக்கை சொல்வது என்ன? - முன்னதாக, பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றபோது நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களால் இன்று இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக மாறி உள்ளது என்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான 10 ஆண்டுகால பாஜக ஆட்சி மற்றும் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் எப்படி இருந்தது என ஒப்பீடு செய்து மத்திய அரசு வெள்ளைஅறிக்கை தயாரித்துள்ளது. இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை தாக்கல் செய்தார். 59 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையில் முதல் 24 பக்கங்கள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் பொருளாதார தோல்விகள் குறித்தும், அதன்பிறகு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பொருளாதார மேம்பாடுகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:
‘காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2004-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றபோது, நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்தது. ஆனால், அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, பொருளாதாரம் மோசமடைய தொடங்கியது. 1991-ம் ஆண்டு உலகமயமாக்கல் கொள்கையை கொண்டுவந்ததை பெருமையாக பேசி வந்தவர்கள், 2004-ல் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த கொள்கைகளை அப்படியே கைவிட்டார்கள். காமன்வெல்த் விளையாட்டுகள், 2ஜி அலைக்கற்றை, சாரதாசிட் ஃபண்ட், ஐஎன்எக்ஸ் மீடியா, ஆண்ட்ரிக்ஸ் தேவாஸ் என பெரிய அளவிலான பல ஊழல்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டுகால ஆட்சியில் நடந்தன.
வாராக் கடனும், நிதி பற்றாக்குறையும் உச்சத்தில் இருந்தன. பணவீக்கம் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு இரட்டைஇலக்கத்தில் இருந்தது. முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய தயக்கம் காட்டும் சூழல் உருவானது. ஒட்டுமொத்தமாக, நாட்டின் பொருளாதாரம் மிகவும் பரிதாபமான நிலைக்கு சென்றது. இத்தகைய சூழலிலேயே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது. காங்கிரஸின் மோசமான திட்டங்களால் சரிந்து போன பொருளாதாரத்தை உடனே மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை நாங்கள் உணர்ந்தோம். பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தினோம்.
2014-ம் ஆண்டு உலகின் பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில்10-வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 2027-ம் ஆண்டுக்குள் 3-வது இடத்துக்கு முன்னேறும் என்று சர்வதேச செலாவணி நிதியம் மதிப்பிட்டுள்ளது. இந்த 10 ஆண்டுகால ஆட்சியில் கரோனா, சர்வதேச அரசியல் பிரச்சினை என பல தடைகளுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரத்தை வலுவானதாக மாற்றியுள்ளோம். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற இலக்கு நிர்ணயித்து பயணித்து வருகிறோம்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago