“எனக்கு அனுப்பிய சம்மன்களின் எண்ணிக்கைக்கு நிகராக டெல்லியில் பள்ளிகளைத் திறப்பேன்” - கேஜ்ரிவால்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “தரமான கல்வியை வழங்குவதுதான் எனது அரசின் நோக்கம். விசாரணை அமைப்புகள் எனக்கு அனுப்பிய சம்மன்களின் எண்ணிக்கை அளவுக்கு நகரில் பள்ளிகளைத் திறப்பேன்” என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.

டெல்லியின் மயூர் விஹார் பிரிவு 3 பகுதியில் புதிய அரசுப் பள்ளிக்கு அரவிந்த் கேஜ்ரிவால் அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், "நாட்டின் மிகப்பெரிய தீவிரவாதி நான் என்பது போல பாஜக தலைமையிலான மத்திய அரசு அனைத்து விசாரணை அமைப்புகளையும் எனக்கு எதிராக திருப்பிவிட்டுள்ளது.

அனைத்து குழந்தைகளுக்கும் சிறப்பான கல்வியை வழங்கும்போது அவர்களின் தலைமுறைக்குள் வறுமையை நீக்க முடியும். அந்த இலக்கினை அடைய எனது அரசு அடுத்தடுத்து பள்ளிகளைத் திறக்கிறது. முன்பு தேசிய தலைநகரின் அரசு பள்ளிகளின் தரம் நம்பிக்கை அளிப்பதாக இல்லை. எளிய மக்களின் பிள்ளைகள் எதிர்காலமின்றி இருந்ததனர். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்ததில் இருந்து நாங்கள் குறிப்பிடத்தகுந்த அளவில் பல பள்ளிகளை திறந்திருக்கிறோம். புராரி, ரோகிணி மற்றும் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் பல புதிய பள்ளிகள் திறக்கப்பட்டன. இதன்மூலம் 1.5 லட்சம் குழந்தைகள் கல்வி பெறுவார்கள்.

டெல்லியில் அனைவருக்கும் தரமான இலவச கல்வி கிடைக்கும். பழைய பள்ளிகளுக்கு பதிலாக புதிய பள்ளிகள் கட்டப்பட்டு வருகின்றன. புதிய பள்ளிகளில் சிறந்த உள்கட்டமைப்பு, நூலகங்கள், லிப்ட்கள், செய்முறை அறைகள் அனைத்தும் இருக்கும். நாங்கள் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் கனவினை நிறைவேற்றுகிறோம்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை வழங்கும் திட்டத்தை நாங்கள் முன்மொழிந்தோம். ஆனால், மத்திய அரசு அதற்கு அனுமதி அளிக்கவில்லை. துணைநிலை ஆளுநர் மூலம் அதனைத் தடுத்தார்கள். ஆனால், நாங்கள் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை வழங்கும் திட்டத்தை சனிக்கிழமை பஞ்சாபில் தொடங்கவுள்ளோம். பஞ்சாப்பில் அந்தத் திட்டம் தொடங்கப்பட்ட பின்பு டெல்லியிலும் அமல்படுத்தப்படும். அப்போது மத்திய அரசு அதனை தடுக்க முடியாது.

டெல்லி ஒரு யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய அரசு பல தடைகளை ஏற்படுத்துகிறது. டெல்லியை மாநிலமாக அறிவிக்கக் கோருகிறேன். ஆனால், அவர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள், நம்மையும் செய்யவிட மாட்டார்கள்.

டெல்லி மக்களுக்கு இலவச மின்சாரம், சுகாதார வசதி, கல்வி வழங்கிய பின்னரும், இந்த வசதிகள் அனைத்தும் பாஜக ஆளும் மாநிலங்களில் விலை அதிகமாகவும் தரம் குறைவாக இருந்த போதிலும் பாஜக என்னை திருடன் என்று முத்திரை குத்துகிறது" என்று கேஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள புகாரின் மீதான விசாரணைக்கு பிப்.17-ம் தேதி நகர நீதிமன்றமத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, டெல்லி மதுமான ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராக கோரி அமலாக்கத் துறை அனுப்பிய 5 சம்மன்களையும் அவர் நிராகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE