வேலைக்கு நிலம் வழக்கு: லாலு மனைவி ராப்ரி தேவி, இரு மகள்களுக்கு ஜாமீன்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கில் பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி, மகள்கள் மிசா பாரதி மற்றும் ஹேமா யாதவ் ஆகியோருக்கு பிப்.28-ம் தேதி வரை ஜாமீன் வழங்கி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

வழக்கமான ஜாமீன் மனு மீது பதில் அளிப்பதற்கு அமலாக்கத் துறை கால அவகாசம் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே மூவருக்கும் இந்த இடைக்கால ஜாமீனை வழங்கினார்.

இந்த வழக்குத் தொடர்பாக அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பியது. நீதிமன்ற சம்மனைத் தொடர்ந்து ராப்ரி தேவி, மிசா பாரதி, ஹேமா யாதவ் ஆகியோர் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராகினர். விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படாத நிலையில், ஏன் நீதிமன்ற காவல் தேவை என்று அமலாக்கத் துறையிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

முன்னதாக, ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கில் லாலு மற்றும் குடும்பத்தினர் மீது இன்னும் ஒரு மாதத்துக்குள் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சிபிஐ, நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. மேலும் பிப்ரவரி மாத இறுதிக்குள் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் வரை இந்த மனுவை நிறுத்தி வைப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது. இந்த வழக்கை பிப்.27-ம் தேதி பட்டியலிடப்பட்டுள்ளது.

வழக்கு பின்னணி: ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004 முதல் 2009 வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது இந்திய ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் ‘குரூப் டி’ பதவிகளுக்கு பல்வேறு நபர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு வேலை வழங்க லாலுவும் அவரது குடும்பத்தினரும் நிலங்களை லஞ்சமாகப் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐயும் அமலாக்கத் துறையும் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE