பாஜக - தெலுங்கு தேசம் கூட்டணி அமைகிறது: ஆந்திர அரசியலில் திடீர் திருப்பம்

By என். மகேஷ்குமார்

அமராவதி: தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார். இதனால் ஆந்திராவில் பாஜக - தெலுங்கு தேசம் கூட்டணி மீண்டும் உருவாகலாம் என்று கூறப்படுகிறது.

வரும் மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரசட்டப் பேரவைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆந்திர அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. ஜனசேனா கட்சித் தலைவரும் நடிகருமான பவன் கல்யாணுடன்தான் இம்முறை கூட்டணி என்று சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

இதனால் ஏற்கெனவே ஜனசேனாவுடன் கூட்டணி அமைத்த பாஜகவின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்தது. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனும் பாஜகவுக்கு நெருக்கமாக உள்ளார். அவரும் தொடக்கத்தில் இருந்தே மத்திய அரசை பகைத்துக்கொள்ளாமல் அனைத்து மசோதாக்களுக்கும் ஆதரவு அளித்து வந்தார்.

இது பாஜகவுக்கு சாதகமான விஷயம் தான். ஆனால் ஜெகன்மோகன் ரெட்டி, யாருடனும் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டதால் ஆந்திராவில் மீண்டும் சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணி வைக்க பாஜக தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.

இதனால் பாஜக அழைப்பு விடுத்ததன் பேரில் நேற்று முன்தினம் (பிப்.7) டெல்லி சென்ற சந்திரபாபு நாயுடு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவுடன் அன்று இரவு பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் இவர்கள் இருவரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வீட்டுக்கு சென்று அங்கும் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

இதனால் இம்முறை தெலுங்கு தேசம் - பாஜக - ஜனசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆந்திராவில் தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, மறைந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகளும் முதல்வர் ஜெகனின் தங்கையுமான ஒய்.எஸ்.ஷர்மிளா, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அவர் ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் ஆந்திராவில் காங்கிரஸார் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தெலங்கானா தனி மாநிலம் வழங்கியதால் ஆந்திராவில் தனது செல்வாக்கை இழந்த காங்கிரஸுக்கு ஷர்மிளாவின் வருகை புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். இதனால் பிற கட்சிகளுக்கு சென்ற காங்கிரஸார் மீண்டும் தங்கள் தாய் கட்சியில் இணைய முன்வருகின்றனர். இதனால் இம்முறை ஜெகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் ஓட்டுகள் காங்கிரஸுக்கு பிரியும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தெலுங்கு தேசம் கூட்டணிக்கு சாதகமாக அமையும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே, ஆங்கில நாளிதழ் ஒன்று எடுத்த ஆய்வில் 2024 மக்களவைத் தேர்தலில் ஆந்திராவில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 17 தொகுதிகளை தெலுங்கு தேசம் கட்சி கைப்பற்றும் என்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்