கர்நாடகாவில் பழமையான விஷ்ணு, சிவலிங்க சிலைகள் கண்டெடுப்பு

By இரா.வினோத்


பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கிருஷ்ணா ஆற்றங்கரையில் பழமையான விஷ்ணு, சிவலிங்க சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் மாவட்டத்தில் தேவசுகூரு கிராமம் உள்ளது. இங்கு கிருஷ்ணா ஆற்றில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ஆற்றில் குழி தோண்டிய போது பழமையான விஷ்ணு, சிவன் சிலைகள் கிடைத்துள்ளன. இது குறித்து தகவல் அறிந்த ரெய்ச்சூர் மாவட்ட அதிகாரிகள் பழமையான சிலைகளை மீட்டு, அரசின் தொல்லியல் துறை அலுவலகத்தில் பத்திரமாக வைத்துள்ளனர். இந்த சிலைகள் குறித்த ஆய்வை தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது பற்றி ரெய்ச்சூர் அரசு கல்லூரியின் வரலாறு மற்றும் தொல்லியல் துறை பேராசிரியை பத்மஜா தேசாய் கூறுகையில், “இந்த சிலை கிபி 12 முதல் 15 ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலையாக இருக்கலாம். தற்போது கிடைத்துள்ள விஷ்ணு சிலை தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளது. இந்த சிற்பத்தை சுற்றிய அலங்கார வளைவில் கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், ராமர், கிருஷ்ணர், புத்தர் உள்ளிட்ட விஷ்ணுவின் 10 அவதாரங்களை பிரதிபலிக்கும் சிறிய வகை சிற்பங்கள் உள்ளன. விஷ்ணுவின் நிற்கும் தோற்றம் ஆகமங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களுடன் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார். அண்மையில் அயோத்தி ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பால ராமர் சிலையை போலவே, இந்த விஷ்ணு சிலை இருப்பதால் பக்தர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE