சென்னை - பெங்களூரு விரைவுச்சாலை பணிகள் டிசம்பருக்குள் நிறைவு: கட்கரி தகவல்

By இரா.வினோத்


புதுடெல்லி: சென்னை - பெங்களூரு பசுமை விரைவுச் சாலை பணிகள் இந்த ஆண்டு டிசம்பருக்குள் முடிவடையும் என்று மத்திய சாலைப் போக்கு வரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

மக்களவையில் வியாழக் கிழமை திமுக எம்.பி. தயாநிதி மாறன், சென்னை - பெங்களூரு பசுமை விரைவுச் சாலை பணிகள் எப்போது நிறைவடையும் என கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய சாலைப் போக்கு வரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பதிலளிக்கையில், ''இந்த சபைக்கு நம்பிக்கையான வாக்குறுதி ஒன்றை அளிக்க விரும்புகிறேன். இந்த ஆண்டின் டிசம்பர் இறுதிக்குள் சென்னை பெங்களூரு பசுமை விரைவுச் சாலை பணிகளை முடிக்க எங்களால் முடிந்த அளவுக்கு முயற்சித்து வருகிறோம்.

அந்த சாலை பயன்பாட்டுக்கு வந்தால் சென்னைக்கும் பெங்களூருவுக்கும் இடையே உள்ள தூரத்தை 2 மணி நேரத்தில் கடக்க முடியும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இந்த திட்டம் குறித்து பேசியுள்ளேன். அவரிடம் தமிழகத்தில் நெடுஞ்சாலைகள் அமைப்பதில் தேசிய நெடுஞ்சாலைத் துறை எதிர்கொள்ளும் பிரச்சனைகளை குறித்து தெரிவித்தேன்.

இந்த விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை. இந்த திட்டத்தை விரைந்து முடிக்க மாநில அரசு அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்கவும் தயாராக இருப்பதாக தெரிவித்தேன்” என்று நிதின் கட்கரி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE