சூட்கேஸ் என நினைத்து வாக்குப்பதிவு இயந்திரத்தை எடுத்துச் சென்ற திருடர்கள்: 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்

By செய்திப்பிரிவு

மும்பை: புனே நகரில் செயல் விளக்கம்அளிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை (இவிஎம்) சூட்கேஸ் என நினைத்து திருடர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் புனே மாவட்டம், சாஸ்வாத் தாலுகா அலுவலகத்தில் உள்ள ஓர்அறையில் இவிஎம் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த அறையின் பூட்டு உடைக்கப்பட்டு, இவிஎம் திருட்டுபோனது திங்கட்கிழமை காலை தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, அலுவலகத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதன் அடிப்படையில் சிவாஜி பந்தகர், அஜிங்கியா சலுங்கே ஆகிய இருவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இவர்கள் இருவரும் இவிஎம் திருடிச் சென்றதை ஒப்புக்கொண்டனர். சூட்கேஸ் என நினைத்து இவிஎம்-ஐ எடுத்துச் சென்றதாக அவர்கள் கூறினர். பிறகு அவர்களால் தூக்கி வீசப்பட்ட இவிஎம்-மை போலீஸார் கைப்பற்றினர். மேலும் திருட்டில் ஈடுபட்ட 3-வது நபரை தேடி வருகின்றனர்.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் இவிஎம் திருட்டுபோனது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த இவிஎம் பயிற்சி மற்றும் விழிப்புணர்வுக்காக வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் கூறினர். எனினும் இந்தப் பிரச்சினையை தேர்தல் ஆணையம் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளதாக மாநில தேர்தல் அதிகாரிகாந்த் தேஷ்பாண்டே கூறினார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 3 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யும்படி மாநில தலைமைச் செயலாளரை தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE