“2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்” - பிரதமர் மோடி நம்பிக்கை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: வரும் 2047ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இஸ்கான் அமைப்பின் நிறுவனரான ஸ்ரீலஸ்ரீ பிரபுபாதாவின் 150-ம் ஆண்டு பிறந்த தின விழா டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. இஸ்கான் அமைப்பைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்ட இந்த விழாவில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "நாட்டுப் பற்றின் சக்தியுடன் இன்று கோடிக்கணக்கான நாட்டு மக்கள் அமிர்த காலத்தில் நுழைந்துள்ளனர். இந்த அமிர்த காலத்தில் (2047-ம் ஆண்டுக்குள்) இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற நாம் உறுதி எடுத்துள்ளோம். நாடுதான் கடவுள் என்ற எண்ணத்துடன் நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். அதற்கான தொலைநோக்குப் பார்வையை கடவுளிடம் இருந்தே பெற்றுள்ளோம்.

பல நூற்றாண்டு கனவான அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த நிலையில், தற்போது பிரபுபாதா கோஸ்வாமியின் 150-ம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் நாம் கூடி இருக்கிறோம். மகிழ்ச்சியும் உற்சாகமும் உங்கள் முகங்களில் தெரிவதை நான் உணர்கிறேன். குழந்தை ராமர் வந்துவிட்டார் என்பதும் இந்த மகிழ்ச்சிக்கும் உற்சாகத்துக்கும் காரணம்.

15-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சைதன்ய மகாபிரபு, பகவான் கிருஷ்ணர் மீது கொண்ட அன்பின் உருவகமாக திகழ்ந்தார். ஆன்மிகமும், ஆன்மிக பயிற்சியும் எளிய மக்களுக்கும் கிடைக்கச் செய்தார். துறவின் மூலம் மட்டும்தான் கடவுளை அடைய முடியும் என்பதில்லை, மகிழ்ச்சியின் மூலமாகவும் அடைய முடியும் என அவர் நமக்கு தெரிவித்தார். சங்கீர்த்தனம், பஜனை, பாடல், ஆடல் மூலமாகவும் ஆன்மிகத்தின் உச்சத்தை அடைய முடியும் என்பதை ஏராளமான பக்தர்கள் இன்று உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பாரத் மண்டபத்தில் சமீபத்தில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்றதை புதிய இந்தியா பார்த்தது. தற்போது இந்த மண்டபத்தில் உலக வைணவ மாநாடு நடைபெறுவது மிகப் பெரிய கவுரவம்" என தெரிவித்தார்.

முன்னதாக, ஸ்ரீலஸ்ரீ பிரபுபாதாவின் தபால் தலை மற்றும் நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். அப்போது, பிரபுபாதாவின் தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிடும் வாய்ப்பு தனக்கு கிடைத்தது தனக்கு கிடைத்த பெரிய கவுரவம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE