“கூட்டாட்சிக் கட்டமைப்பை பாதுகாக்க வேண்டும்” - டெல்லி ஆர்ப்பாட்டத்தில் பினராயி விஜயன் முழக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பை பாதுகாக்க டெல்லியில் கூடியுள்ளோம்” என்று டெல்லி போராட்டம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசியுள்ளார்.

மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் மத்திய பாஜக அரசு தலையிடுவதை எதிர்த்து, டெல்லி ஜந்தர் மந்தரில் கேரள அமைச்சரவை சார்பில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் தமிழக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தில் கேரளத்தில் ஆளும் எல்டிஎப் கூட்டணியின் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, கேரளா இல்லத்தில் தொடங்கிய கண்டன ஊர்வலம் ஜந்தர் மந்தரில் உள்ள போராட்ட தளத்தில் நிறைவடைந்தது.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், "மாநிலங்களின் யூனியன் என கருதப்படும் மத்திய அரசானது எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எதிரான ஜனநாயகமற்ற அரசாக மாறிக்கொண்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், மத்திய - மாநில உறவுகளில் சமநிலையை மீட்டெடுக்கும் வகையிலும் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

மாநிலத்தின் அதிகாரங்களை பறிக்கும் வகையில் மத்திய அரசு சட்டங்களை உருவாக்கி வருகிறது. மாநிலங்களின் உரிமைகள் நசுக்கப்படுகிறது. மாநிலங்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில், மாநிலங்களின் கருத்தைக் கேட்காமல், அவர்களின் ஒப்புதலைப் பெறாமல், பன்னாட்டு ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன. இவை அனைத்தும் மாநிலங்களின் உரிமைகள் எப்படி நசுக்கப்படுகின்றன என்பதற்கும், இந்தியா எவ்வாறு ஜனநாயகமற்ற நாடாக மாறுகிறது என்பதற்கும் உதாரணம்.

மாநிலங்களின் நிதி ஆதாரங்களை மத்திய அரசு எடுத்துக்கொள்வதால் இந்தியாவின் கூட்டாட்சிக் கட்டமைப்பு பாதிக்கப்படுகிறது. இதற்கு எதிராக எங்களின் வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்யவும், இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பைப் பாதுகாக்கவும் இன்று டெல்லியில் நாங்கள் ஒன்றுகூடியுள்ளோம்" என்று பேசினார்.

இதனிடையே, மத்திய இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்தும், வெள்ள நிவாரணம் தராததை கண்டித்தும் நாடாளுமன்ற வளாக காந்தி சிலை முன்பு திமுக கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன் முழு விவரம்: “நிவாரணம் கேட்கவில்லை; உரிமையைத் தாருங்கள்”- நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் போராட்டம்

முன்னதாக, மத்திய அரசை கண்டித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் நேற்று போராட்டம் நடத்தினர். இதில் கர்நாடக துணை முதல்வர்டி.கே.சிவகுமார், அமைச்சர்கள், காங்கிரஸ் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதன் முழு விவரம்: கர்நாடகாவுக்கு உரிய நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து டெல்லியில் முதல்வர் சித்தராமையா தலைமையில் போராட்டம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்