உத்தராகண்ட் மாநிலத்தைத் தொடர்ந்து ராஜஸ்தானில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் ஆகிறது

By செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: தொடர்ந்து ராஜஸ்தானில் பொது சிவில் சட்ட மசோதாவை தாக்கல் செய்ய அம்மாநிலத்தை ஆளும் பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என பாஜக தேர்தல் அறிக்கைகளில் தொடர்ந்து கூறி வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனினும், இது தொடர்பாக மத்திய அரசு மக்களிடம் கருத்து கேட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டிலேயே முதல் முறையாக, உத்தராகண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து பாஜக ஆளும் பிற மாநிலங்களும் பொது சிவில் சட்ட மசோதாவை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளன.

இதுகுறித்து ராஜஸ்தான் மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மதன் திலாவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவான சட்டம் இருக்க வேண்டியது அவசியம். வெவ்வேறு சட்டம் அமலில் இருந்தால் அது மக்களை வெகுவாக பாதிக்கும். ஒற்றுமையை சீர்குலைக்கும். எனவே பொது சிவில் சட்டம் இன்று இல்லாவிட்டால் நாளை கொண்டுவரப்படும். ஆனால் எப்போது என்பதை சொல்ல முடியாது” என்றார்.

இதுகுறித்து பொது சுகாதார துறை அமைச்சர் கன்னையா லால் கூறும்போது, “பொது சிவில் சட்டம் குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்த உள்ளோம். இந்தசட்டம் கொண்டு வர வேண்டும் என்பது என்னுடைய விருப்பமும் கூட. நாட்டில் 2-வதுமாநிலமாக, பொது சிவில் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அமல்படுத்தப்படும்.

நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் போதுமான கால அவகாசம் இல்லை. எனவே, மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு வரும் ஜூன்-ஜூலை மாதங்களில் இந்த மசோதா நிறைவேற்றப்படும். ராஜஸ்தானில் மட்டுமல்ல, நாடு முழுவதும் இது அமல்படுத்தப்பட வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE