“ராமரை அடுத்து கிருஷ்ணரும் பிடிவாதம் பிடிக்கிறார்” - மதுரா மசூதி விவகாரத்தில் உ.பி முதல்வர் யோகி கருத்து

By செய்திப்பிரிவு

லக்னோ: அயோத்தியில் ராமருக்கு பிரம்மாண்ட கோயில் கட்டப்பட்டதை அடுத்து, தற்போது கிருஷ்ணரும் பிடிவாதம் பிடிக்கிறார் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அம்மாநில சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். மதுரா மசூதி விவகாரத்திலேயே அவர் இந்தக் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், "அயோத்தியில் ராம ஜென்ம பூமியில் ராமருக்கு பிரம்மாண்ட கோயில் கட்டப்பட்டிருப்பதில் நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். தான் பிறந்த இடம் இதுதான் என குழந்தை ராமரே ஆதாரத்தை வழங்கிய நிகழ்வு உலகில் முதல்முறையாக நடந்தது. இது நமக்கு விடா முயற்சியை கற்றுக் கொடுத்துள்ளது. ராமர் தான் பிறந்த இடத்தில் கோயில் கொண்டுவிட்டார் என்பது மட்டுமல்ல, கொடுத்த வாக்குறுதியை நாம் நிறைவேற்றி இருக்கிறோம் என்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விவகாரத்தில் நாம் பேசுவதோடு நின்றுவிடவில்லை; பேசிய வழியில் நடந்து காட்டினோம்.

அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை முன்பே நடந்திருக்க வேண்டும். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருந்தது என்பது நமக்குத் தெரியும். ஆனால், அயோத்தியின் சாலைகளை நாம் ஏன் முன்பே விரிவாக்கம் செய்திருக்கக் கூடாது. நாம் ஏன் முன்பே விமான நிலையத்தை அமைத்திருக்கக் கூடாது. அயோத்தி, காசி, மதுரா ஆகியவற்றை மேம்படுத்துவதை தடுத்த மனநிலையை என்ன என்பது?

முந்தைய ஆட்சியாளர்களின் காலத்தில் ஊரடங்கு உத்தரவுகளையும், தடை உத்தரவுகளையும் எதிர்கொண்டது அயோத்தி. தீய நோக்கங்களால் அயோத்தி பல நூற்றாண்டுகளாக பாதிக்கப்பட்டது. அயோத்திக்கு அநீதி இழைக்கப்பட்டது. அநீதி குறித்து நான் பேசும்போது, 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அநீதி குறித்தும் பேசியாக வேண்டும். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பாண்டவர்களும் அநீதியை எதிர்கொண்டார்கள். அப்போது, கவுரவர்களிடம் தூது போன கிருஷ்ணர், பாண்டவர்களுக்கு 5 கிராமங்களை மட்டும் கொடுக்குமாறும் மற்றதை வைத்துக்கொள்ளுமாறும் கூறினார். ஆனால், துரியோதனன் ஏற்க மறுத்துவிட்டான்.

அயோத்தி, காசி, மதுரா விவகாரத்திலும் இந்த நிலைதான் உள்ளது. கிருஷ்ணர் 5 கிராமங்களைக் கேட்டார். தற்போது இந்து சமுதாயம் தனது நம்பிக்கையின் அடிப்படையில், அயோத்தி, காசி, மதுரா எனும் மூன்று மையங்களைக் கேட்கிறது.

அயோத்தியில் நடைபெற்ற பிராண பிரதிஷ்டையை பார்த்த காசியில் உள்ள நந்தி பகவான் (சிவபெருமானின் வாகனம்), தானும் அடம்பிடிக்கத் தொடங்கினார். அதனால், காசியில் (மசூதிக்கு முன்பாக) இருந்த தடுப்புகள் அகற்றப்பட்டு, (கியான்வாபி மசூதிக்குள்) வழிபாடு தொடங்கி உள்ளது. தற்போது மதுராவில் உள்ள கிருஷ்ணரும் அடம்பிடிக்கிறார்" என தெரிவித்துள்ளார்.

மதுராவில் உள்ள ஷாஹி இட்கா மசூதி, கிருஷ்ண ஜென்ம பூமியில் உள்ள கோயிலை இடித்துவிட்டு கட்டப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. யோகி ஆதித்யநாத்தின் பேச்சு, அயோத்தியை அடுத்து காசி மற்றும் மதுரா விவகாரத்துக்கும் முன்னுரிமை கொடுக்கும் வகையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

பின்னணி என்ன? - வாராணசியின் கியான்வாபியை போல், மதுரா மசூதியிலும் கள ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக முஸ்லிம் தரப்பினர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கள ஆய்வுக்கு தடை விதித்துள்ளது. இந்த தடை வரும் ஏப்ரல் வரை தொடரும் வகையில் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற கள ஆய்வு வாராணசி கியான்வாபி மசூதியிலும் கடந்த ஆண்டு ஏஎஸ்ஐ சார்பில் நடத்தப்பட்டது. அதில், இந்து கோயிலை இடித்துவிட்டு அம்மசூதியைக் கட்டியதற்கான பல்வேறு தொல்லியல் ஆதாரங்கள் கிடைத்ததாக தகவல் வெளியானது நினைவுகூரத்தக்கது.

இதனிடையே, மதுராவில் கோயிலை இடித்துவிட்டு அவுரங்கசீப் மசூதியை கட்டியதாக இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகம் (ஏஎஸ்ஐ) தெரிவித்துள்ளது. தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ஏஎஸ்ஐ இப்பதிலை அளித்துள்ளது. அதன் விவரம்: மதுராவில் கோயிலை இடித்து மசூதி கட்டினார் அவுரங்கசீப்: தகவல் உரிமை சட்ட கேள்விக்கு ஏஎஸ்ஐ பதில்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

39 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்