கர்நாடகாவுக்கு உரிய நிதியை மத்திய அரசு ஒதுக்க வலியுறுத்தி டெல்லியில் போராட்டம்: முதல்வர் சித்தராமையா பங்கேற்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கர்நாடகாவுக்கு உரிய நிதியை மத்திய அரசு ஒதுக்க வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மத்திய அரசு தனது நிதித் தொகுப்பில் இருந்து கர்நாடகாவுக்கு உரிய பங்கினை ஒதுக்க மறுப்பதாக கர்நாடக அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு கர்நாடகாவுக்கு உரிய நிதியை உடனடியாக ஒதுக்க வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. இதில், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார், மாநில அமைச்சர்கள், கர்நாடகாவைச் சேர்ந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, “ஜிஎஸ்டியைப் பொறுத்த வரையில், கர்நாடகாவுக்கு உரிய வரிப் பகிர்வு வழங்கப்படுவதில்லை. கர்நாடகாவின் பிற கோரிக்கைகளையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை.

வரி வருவாயைப் பொறுத்தவரை நாட்டிலேயே மகாராஷ்டிரா முதலிடத்தில் இருக்கிறது என்றால், கர்நாடகா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இந்த ஆண்டு கர்நாடகா ரூ. 4.30 லட்சம் கோடியை வரியாக வழங்கி இருக்கிறது. நாங்கள்(கர்நாடக அரசு) வரியாக ரூ. 100 வசூலித்து மத்திய அரசிடம் கொடுத்தால், மத்திய அரசு எங்கள் பங்காக ரூ. 12-13 வரை மட்டுமே திருப்பி தருகிறது. மத்திய அரசு கர்நாடகாவுக்கு தொடர்ந்து அநீதி இழைத்து வருகிறது. கர்நாடகாவின் மேல் பத்ரா திட்டத்துக்காக கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ. 5,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், இதுவரை ஒரு ரூபாயைக் கூட விடுவிக்கவில்லை. வறட்சி நிவாரண நிதியும் வழங்கப்படவில்லை.

இந்த போராட்டத்தின் முக்கிய நோக்கமே, மாநில நலனையும் கர்நாடக மக்களையும் பாதுகாப்பதே. இது பாஜகவுக்கு எதரிான காங்கிரஸ் கட்சியின் போராட்டம் அல்ல. நாங்கள் இங்கு நடத்தும் போராட்டம் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் என நம்புகிறோம். மத்திய அரசு கர்நாடகாவுக்கு உரிய நியாயத்தை வழங்க வேண்டும். ஒருவேளை மத்திய அரசு உரிய நிதியை வழங்காவிட்டால், நாங்கள் அது குறித்து கர்நாடக மக்களிடம் முறையிடுவோம்” எனத் தெரிவித்தார்.

போராட்டம் குறித்து பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, “ஜிஎஸ்டியில் எங்கள் பங்கினை வழங்கக் கோரி நாங்கள் கோரிக்கை விடுத்தோம். வறட்சி காரணமாக கர்நாடகா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, வறட்சி நிவாரண நிதியாக ரூ.18 ஆயிரம் கோடி ஒதுக்குமாறு கோரி மனு கொடுத்தோம். ஆனால், மத்திய அரசு எந்த உதவியையும் செய்யவில்லை” என குற்றஞ்சாட்டினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE