மத்திய பிரதேசத்தில் சட்டவிரோதமாக இயங்கிய பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 11 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

போபால்: மத்திய பிரதேசத்தின் ஹர்தா நகரில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறின. இதில் 11 பேர் உயிரிழந்தனர், 200 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மத்திய பிரதேசத்தின் ஹர்தா மாவட்டத்தில் உள்ள பைராகர் கிராமத்தில் சட்டவிரோதமாக பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்தது. இங்கு நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசுகள் வெடித்து சிதறியதால், ஆலை முழுவதும் தீப்பற்றியது. விண்ணை முட்டும் அளவுக்கு ராட்சத புகை மண்டலம் எழுந்தது.

பயங்கர வெடி விபத்து காரணமாக ஏற்பட்ட அதிர்வுகள் 15 கி.மீ. சுற்றளவு வரை உணரப்பட்டது. அருகில் உள்ளநர்மதாபுரம் மாவட்டத்தின் சியோனி மால்வா பகுதியில் உள்ள கட்டிடங்களும் அதிர்ந்தன. ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன.

வெடி விபத்தை தொடர்ந்து, ஆலை அருகே வசித்த மக்கள் அனைவரும் பீதியடைந்து ஓடினர். சிலர் வாகனங்களில் தப்பிச் சென்றனர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி சிலர் உயிரிழந்தனர். 200 பேர் படுகாயம் அடைந்தனர் என ஹர்தா கோத்வாலி காவல் நிலைய ஆய்வாளர் அப்துல் ராயிஸ்கான் தெரிவித்தார்.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், பல பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

வெடி விபத்து ஏற்பட்டபோது, பட்டாசுஆலையில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்ததாக, ஆலையில் இருந்து தப்பி வந்த ஊழியர் ஒருவர் கூறினார். காயம் அடைந்த பலரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே, விபத்து குறித்து ஹர்தா மாவட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு முதல்வர் மோகன் யாதவ் விவரம் கேட்டறிந்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘அமைச்சர் உதய் பிரதாப் சிங் மற்றும்மூத்த அதிகாரிகள் ஹர்தாவுக்கு சென்றுள்ளனர். தீக்காயங்களுக்கு சிகிச்சைஅளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு போபால், இந்தூரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்துக்கு மேலும் பல தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன. காயம்அடைந்தவர்களுக்கு உதவ 400 போலீஸார் சென்றுள்ளனர். 50 ஆம்புலன்ஸ் வாகனங்களும் அனுப்பப்பட்டுள்ளன’’ என்றார். தேசிய பேரிடர் மீட்பு குழுவினரையும் உதவிக்கு அழைத்துள்ளதாக ஹர்தா மாவட்ட ஆட்சியர் ரிஷி கார்க் கூறினார்.

ரூ.6 லட்சம் இழப்பீடு: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும். காயம் அடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று முதல்வர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ‘பட்டாசு ஆலை வெடி விபத்து சம்பவம் வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம், காயம் அடைந்தோருக்கு ரூ.50,000 வழங்கப்படும். காயம் அடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE